சேகர் ரெட்டியிடம் பறிமுதல் செய்த பணம் முழுவதும் அவர் நியாயமாக சம்பாதிக்க பணமாம் !! வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Jun 22, 2019, 9:08 AM IST
Highlights

சேகர்ரெட்டியிடம் கைப்பற்றிய ரூ.33 கோடியே 89 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு கட்டுகள், அவருக்கு மணல்குவாரி மூலம் கிடைத்த வருமானம்தான் என்று வருமானவரி விசாரணைக்குழு அறிக்கை அளித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன.

இந்தநிலையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி பிரபல தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரூ.33 கோடியே 89 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்டன.

அந்த நேரத்தில் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் குறைந்த அளவு பணம் எடுக்க பலரும் மணிக்கணக்கில் காத்து கிடந்த போது சேகர் ரெட்டிக்கு மட்டும் கோடிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கிடைத்தது எப்படி? என பரபரப்பாக பேசப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி சேகர்ரெட்டி மீது தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்தது.

ஒரே குற்றச்சாட்டுக்காக பல வழக்குகளை பதிவு செய்யக்கூடாது என்று கூறி சேகர்ரெட்டி மீதான 3 வழக்குகளில் 2 வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதேபோன்று பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து சேகர்ரெட்டிக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியது.

முடக்கிய சொத்துகள், பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் வராது என்று கூறி அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கோர்ட்டு ரத்து செய்தது.

இந்தநிலையில் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ரூ.33 கோடியே 89 லட்சம் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது, அந்தப்பணம் சேகர் ரெட்டிக்கு சொந்தமானதுதான் என்ற முடிவுக்கு வருமானவரித்துறை வந்துள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித்துறையின் விசாரணைக்குழு, உயர் அதிகாரிகளுக்கு அளித்த அறிக்கையில், சேகர் ரெட்டி தனது எஸ்.ஆர்.எஸ். மைனிங்ஸ் என்ற மணல் குவாரி நிறுவனத்தின் மூலம் மணல் விற்பனை செய்து வந்துள்ளார். 

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 89 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இந்த மணல் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இது தொழில் மூலம் கிடைத்த வருமானம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!