
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் குற்றவாளிகளுக்கு தலைவராகத் திகழ்கிறார் என்றும், கே.டி ராகவனுடன் கூட்டு குற்றவாளியாக அவர் செயல்படுகிறார் என்றும், மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் காட்டமாக தெரிவித்துள்ளார். பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசிய சீமானை சும்மா விடமாட்டோம் என எச்சரித்துள்ள அவர், சீமான் பாலியல் சம்பவங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆகிவிட்டதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மகிளா காங்கிரஸ் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் அக்கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, மாநிலத் துணைத் தலைவர் கோபண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மிக முக்கியமாக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி ராகவனுக்கு ஆதரவாக சீமான் பேசியதாகவும், அதை கண்டிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் சம்பவங்களின் ஒருங்கிணைப்பாளராக மாறிவிட்டார் எனவும் குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்கூட்டத்தின் போது பேசிய கே.எஸ் அழகிரி, நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் பெண்கள் கட்சிப் பணி செய்தாலே போதும், எதிர்வரும் தேர்தலில் நாம் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்றும், காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு அதிக பொறுப்ப வழங்கவேண்டும், அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலமும் நிச்சயம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று அவர் கூறினார். மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் செய்து வரும் மத்திய அரசை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன், பாலியல் வீடியோ சர்ச்சையில் கே டி ராகவன் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். அவருக்கு உதவியாக இருக்கும் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோர். இந்நிலையில் அதே கே.டி ராகவனுக்கு ஆதரவாக இப்போது சீமான் வந்து இருக்கிறார். அவர் கே. டி ராகவன் உடன் கைகோர்த்து செயல்படுகிறார், கே.டி ராகவனின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி பேசியிருக்கும் சீமானின் பேச்சால், தமிழகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அவர் மீது கொந்தளிப்பில் உள்ளனர். தமிழின போராளி, பெண்களின் பாதுகாவலர் என கூறிக்கொள்ளும் சீமான் கே.டி ராகவனுக்கு ஆதரவாக பேசி இருப்பது வெட்கக்கேடானது.
அவருக்கு எதிராக விஜயலட்சுமி நடத்திய போராட்டங்களை யாரும் எப்போதும் மறக்க முடியாது. ஒரு பாலியல் குற்றவாளியான சீமான் சக பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் காப்பாற்ற முயற்சி செய்கிறார். சீமான் இப்போது பாலியல் குற்றவாளிகளுக்கு தலைவனாக மாறிவிட்டார். சீமானை சும்மா விட மாட்டோம் தொடர்ந்து அவருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்துவோம் என அவர் எச்சரித்தார்.