
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் போர் மூண்டால் சர்வதேச அளவில் என்ன பரபரப்பு இருக்குமோ அதன் டிரெயிலர் போல் இருக்கிறது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு. இன்றைய நாள் விடிந்தால் நாளை காலை 7 மணி முதல் வளைத்து வளைத்து துவங்க இருக்கிறது வாக்குப் பதிவு. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளின் மேயர் யார் யார் யார்? என்பதுதான் மிகப்பெரிய ரேஸாக போய்க் கொண்டிருக்கிறது.
இம்மாம் பெரிய தேர்தல் திருவிழாவின் கிளைமேக்ஸே வாக்கு எண்ணிக்கைதான். யார் வெற்றி, யார் தோல்வி என்பது சாதாரண வாக்களர்களின் பார்வையாக இருக்கும். ஆனால் அரசியல் கட்சிகள் போடும் கணக்கோ அதையும் தாண்டியது. வெற்றி என்றாலும் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, கடந்த முறையை விட எவ்வளவு அதிகம் அல்லது குறைவு, ஒட்டுமொத்த வெற்றி சதவீதத்தின் இடைவெளி என்ன? என்று எக்கச்சக்க அலசலகள் இருக்கின்றன. ஏனென்றால் அடுத்து கட்சியை வளர்ப்பதும், வலூவூட்டுவது, பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது எல்லாமே இதை சார்ந்ததே.
நகர்ப்புற தேர்தலை பொறுத்தவரையில் இப்போது இருக்கும் சூழலில், முதல் இரு இடங்களைப் பெறுவது. அதாவது ஜெயிப்பது, இரண்டாம் இடம் பிடிப்பது ஆகியவை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வாகதான் இருக்கும். இந்த இரு பெரிய கட்சிகளும்தான் மாறி மாறி ஒன்று மற்றும் இரண்டாம் இடங்களுக்குள் வர வாய்ப்புள்ளது. அப்படியானால் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார்? எனும் கேள்வி மிக முக்கியமானது.
அது பா.ஜ.க.வா, நாம்தமிழர் கட்சியா, மக்கள் நீதி மய்யமா அல்லது அ.ம.மு.க.வா? என்று அலசல்கள் போகின்றன. ஆனால் சமீபத்திய கருத்துக் கணிப்பின் படி கடந்த சில வருடங்களாக தனித்துக் களத்தில் நின்றும், ஓட்டுக்கு காசு கொடுக்காமலும் களமாடிக் கொண்டிருக்கின்ற நாம் தமிழர் கட்சியை விட பி.ஜே.பி. இம்முறை மூன்றாவது இடத்தை எட்டிப் பிடிக்கும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்து. அது மட்டுமல்ல கணிசமான வார்டுகளை அக்கட்சி வின் பண்ணினாலும் ஆச்சரியமில்லை! என்கிறார்கள். காரணம், தங்களை கூட்டணியில் இருந்து விரட்டி விட்டதால் அ.தி.மு.க. மீது அதிக கோபத்திலிருக்கும் பி.ஜே.பி., முடிந்த வரை அ.தி.மு.க.வை தோற்கடிக்க மிகவும் வெறித்தனம் காட்டுகிறதாம். அப்படி இல்லையென்றால் எப்படியாவது மூன்றாவது இடத்தையாவது பிடித்தே ஆக வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் தாங்கள் காலூன்றிவிட்டதை நிரூபித்தே தீர வேண்டும்! என்று கர்ஜனையுடன் களமிறங்கியுள்ளார்களாம். அதனால்தான் நாம் தமிழர் செய்யாத ஒரு காரியத்தை பி.ஜே.பி. செய்கிறது.
அதாவது தமிழகத்தின் பல இடங்களில் வசதியான பி.ஜே.பி. வேட்பாளர்கள், ஓட்டுக்குப் பணம் தருகின்றனர் என்கிறார்கள் களத்தில் வேலைசெய்யும் தொண்டர்கள். அதனால் திராவிட கட்சிகளுக்கு இணையாக அக்கட்சிக்கும் கெத்தும், எதிர்பார்ப்பும் பெருகிக் கொண்டிருக்கிறது என்பதே விமர்சனமாகியுள்ளது.
ஆனால் தங்களை பின் தள்ளிவிட்டு பி.ஜே.பி. மூன்றாம் இடத்தை பிடிக்கும் என்பதை நாம் தமிழர் கட்சியினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் “பி.ஜே.பி.யை ஒரு காலத்திலும் தமிழக மக்கள் ஏற்கவே மாட்டார்கள். பண பலம் மற்றும் அதிகார பலமுடைய தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக அவர்கள் எங்களைத்தான் தேர்வு செய்வார்கள். பி.ஜே.பி. மிக மோசமான நிலையில் மண்ணைக் கவ்வும்.” என்கிறார்கள்.
ஆக மூன்றாவது இடத்துக்கு மூண்டிருக்கும் இந்த முட்டல் மோதல் எங்கே போய் நிற்குமோ!