
எதிர்வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு 10 ஆயிரம் வீதம் 100 கோடி ரூபாய் விநியோகிக்க டிடிவி தினகரன் திட்டமிட்டிருப்பதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலை எதிர்கொள்ள பா.ம.க.,விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்டவைகளைத் தவிர்த்து அனைத்து ஏனைய கட்சிகளுமே தயாராகி விட்டன .
அதிமுகவின் சசிகலா அணி சார்பாக டிடிவி தினகரன், ஓ.பி.எஸ். அணி சார்பாக மதசூதனன், திமுக வேட்பாளராக மருதுகணேஷ், தே.மு.தி.க. சார்பில் மருதுவாணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதனும் களம் காண்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி கடைசி நேரத்தில் கலைக்கோட்டுதயத்தை வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்தச் சூழலில் இடைத்தேர்தல் குறித்து சீமான் மனந்திறந்துள்ளார்.
“ஆர்.கே.நகரை முன்வைத்து நடைபெறும் அனைத்தையுமே ஆரம்பம் முதலே மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேர்தலில் டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு.. ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுக்க அவர்கள் முடிவெடுத்திருப்பதாக சொல்றாங்க. ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம்னு கணக்கு பார்த்தா 1 லட்சம் பேருக்கு 100 கோடி ரூபாய் வருது.”
“இதெல்லாம் அவங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.. ஆனா நாங்க பணநாயகத்தை நம்பாமா ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து தேர்தலைச் சந்திக்கிறோம். நாம் தமிழர் கட்சி அடித்தட்டு மக்களிடம் இருந்தே வேட்பாளரை தேர்வு செய்யும் என்பதை நிரூபிக்கும் களமாகவே ஆர்.கே. நகரை நாங்கள் பார்க்கிறோம். 234 தொகுதிகளிலும் களம் கண்ட எங்களுக்கு ஆர்.கே.நகரை அவ்வளவு சீக்கிரமா விட்டிருவோமா”என்றார் விலாவரியாக...