
உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனின் கைது நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் மீதான சட்ட நடவடிக்கைகள் இதுவரை நடைமுறை படுத்தாத ஒன்றாக இருக்கிறது.
ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை பதவிநீக்கம் செய்யவோ அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கவோ இதுவரை கடைபிடிக்காத முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
சாதாரண மனிதனுக்கு கிடைக்கக்கூடிய சட்ட உரிமைகள் கூட உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மறுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பிறப்பால் ‘தமிழர்’ என்ற ஒரே காரணத்தினால் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றனவோ என்ற எண்ணம் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் எவ்வித விவாதமும், தீர்மானமும் வைக்கப்படாத நிலையில், உச்சநீதிமன்றம் கர்ணன் மீதான தனிப்பட்ட காரணங்கள் தொடர்பாக நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
கர்ணனை துரத்தி துரத்தி கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டிய அளவுக்கு நீதிபதி செய்த குற்றமென்ன என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய தேவை உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது.
இது நீதிமன்றங்களுக்கு இடையிலான பிரச்சினை என மத்திய அரசும் தலையிடாமல் இருப்பது பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு எதிரானது.
எனவே, உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனின் கைது நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.