
சென்னை விமான நிலையத்தில் தமிழக அமைச்சருடன் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் மாநில நிதி அமைச்சர் என்று அவர் கூறிய பின்னரும் அந்த பாதுகாப்பு படை வீரர் பிடிஆரை விமான நிலையத்தில் அனுமதிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை ஆறு மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காலை 5:15 மணிக்கு வந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர், அமைச்சரின் கைப்பையை ஸ்கேன் மூலம் பரிசோதித்தார். அப்போது அமைச்சரின் பையில் இரண்டு லேப்டாப்கள் இருந்தது. அதை பார்த்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர், அமைச்சரிடம், ஏன் நீங்கள் இரண்டு லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என கேட்டார், அதற்கு பிடிஆர் நான் மாநில நிதி அமைச்சர், எனது அவசர தேவைக்காக எடுத்துச் செல்கிறேன் என்றார், ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர், அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்தப் பாதுகாப்பு உதவி ஆய்வாளருக்கு தமிழ் தெரியவில்லை, ஆங்கிலமும் அவருக்கு சரியாக புரியவில்லை, அவர் இந்தி மட்டும் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரிடம் அமைச்சர் இந்தியில் வாக்குவாதம் செய்தார்.
உடனே விமான நிலைய உயர் அதிகாரிகள், தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு வந்து அமைச்சர் பிடிஆரை சமாதானம் செய்தனர். பயணிகளுக்கு உதவி செய்யத்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர், அவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக அல்ல என கூறிய அமைச்சர் அதிகாரிகளை கடிந்து கொண்டார், விமானத்தில் இரண்டு லேப்டாப் எடுத்துச் செல்லக் கூடாதா.? அப்படி ஏதாவது விதிமுறை உள்ளதா என அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார், அப்படி எந்த விதிமுறையும் இல்லை என அதிகாரிகள் கூறியதுடன், அமைச்சரிடம் தவறுக்கு மன்னிப்புக் கேட்டனர். அதேபோல் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரும் அமைச்சரிடம் மன்னிப்பு கோரினார். இதனால் அமைச்சர் தாமதமாக விமானத்தில் ஏற புறப்பட்டார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் காலை பரபரப்பு ஏற்பட்டது.