மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடு.. போலீஸ், துணை ராணுவப்படை சென்னையில் கொடி அணிவகுப்பு.

By Ezhilarasan BabuFirst Published Mar 17, 2021, 6:12 PM IST
Highlights

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கி வருகின்றார்கள். 

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மாதாவரம் காவல் மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. எதிர்வரும் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், செய்யப்பட உள்ள பாதுகாப்பு  ஏற்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் முழு விவரம்: 

வரும் ஏப்ரல்-4 ஆம் தேதி அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதை ஒட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கி வருகின்றார்கள். அதேபோல் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க உரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திட சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய துணை ராணுவ படையினர் ஒருங்கிணைந்து  முக்கிய மக்கள் கூடும் வசிப்பிட பகுதிகளில் காவல் கொடி அணிவகுப்பு( police flag March) நடத்தி வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக இன்று காலை மாதாவரம் காவல் மாவட்டத்தில் காவல் துணை ஆணையாளர் கிருஷ்ணராஜ் அவர்கள் தலைமையில் காவல் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் துணை இராணுவப் படையினருடன் காவல் கொடி அணிவகுப்பு ரெட்டேரி சந்திப்பில் ஆரம்பித்து, விநாயகபுரம் வழியாக புழல் காவல்நிலையம் வரை சென்று நிறைவுபெற்றது.

click me!