பணம் கொடுத்த வீட்டில் ரகசிய குறியீடு? விசாரணைக்கு ரவுண்டு கட்டும் தேர்தல் ஆணையம்!

First Published Dec 19, 2017, 11:07 AM IST
Highlights
Secret code of paid home? Election Commission for Round-Up Investigation


சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், டிடிவி தினகரன், உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளது.

ஆர்.கே.நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற விருந்த இடைத் தேர்தல், பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்தின் பலத்த கண்காணிப்போடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆனாலும், ஆணையத்தின் பலத்த கண்காணிப்பையும் மீறி, தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக
சென்னை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது, ஆர்.கே.நகரில் இதுவரை லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைதும் செய்யப்பட்டுள்ளனர். நூதன முறையிலும் அதாவது, ஆர்.கே.நகர் மக்கள் தங்கள் பொருட்களை அடகு வைத்திருக்கும் சேட்டு கடையில், அடகு பொருளின் சீட்டைக் கொடுத்தால், அதனை தினகரன் ஆதரவாளர்கள் மீட்டு கொடுத்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா முடிந்து விட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த முறை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டபோது, ஒவ்வொரு வீட்டின் முன்பும் ரகசிய குறியீடுகள் இருந்தன. இந்த முறையும் அதேபோல தொகுதிக்குட்பட்ட அனைத்து வீடுகளின் முன்பும் சுவரில் சில ரகசிய குறியீடுகள் இடப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது, வீட்டின் முன்பு குறியிடப்பட்டடுள்ள அந்த
குறியீடுகள், வாக்காளர்களின் எண்ணிக்கையுடன் ஒத்துப்போகிறதாம்.

கடந்தமுறை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டபோது, வீடுகள் முன்பு இடப்பட்ட ரகசிய குறியீடுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது ஆர்.கே.நகரில் உள்ள வீடுகளில் ரகசிய குறியீடுகள் இடப்பட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த குறியீடுகள் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தொகுதி முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பணப்பட்டுவாடா நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆர்.கே.நகரில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வீட்டின் முன்பு ரகசிய குறியீடு இடப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாக வெளியான செய்தியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!