
ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோளுக்கு தோளாக நிற்கிறோம் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஓகி புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டமும் கேரளாவில் 5 மாவட்டங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஒகி புயல் பாதிப்பால் ஆயிரக்கணக்கான மீனவா்களை காணவில்லை என்று குமரி மாவட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனா்.
மீனவா் குடும்பங்களின் போராட்டங்களைத் தொடா்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்கிளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதமா் நரேந்திர மோடி இன்று லட்சத்தீவு , கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிட உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பொது மக்களை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். இந்நிலையில் ஓகி பாதிப்பு தொடர்பாக மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் , ஓகி புயல் பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது என்றும் ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோளுக்கு தோளாக நிற்கிறோம் என்றும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.