9 மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.. காலை முதலே ஆர்வத்துடன் வந்த மாணவர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jan 19, 2021, 10:56 AM IST
Highlights

இதையடுத்து பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், நுழைவு வாயில், கதவு கைப்பிடிகள், ஜன்னல்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டுள்ளது 

9 மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் இன்று காலை ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். நேற்று பள்ளி பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், முதல் 2 நாட்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் 10 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படுவதை தொடர்ந்து பள்ளிகளில் நேற்று பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி உயர்நிலை ப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளின் வளாகத்தில் காணப்பட்ட குப்பைகள் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். 

இதையடுத்து பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், நுழைவு வாயில், கதவு கைப்பிடிகள், ஜன்னல்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு சனிடைசர் பயன்படுத்தி, சமூக இடைவெளியுடன் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கு  கொரோனா தொற்று விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

click me!