பாஜக கொடி கலரில் அரசு பள்ளி இருக்கைகள் ! எதிர்ப்பு கடுமையானதால் உடனடியாக அகற்றிய பள்ளி நிர்வாகம் !!

By Selvanayagam PFirst Published Jun 29, 2019, 10:03 PM IST
Highlights

விழுப்புரத்தில் குழந்தைகள் பயிலும் மழலையர் வகுப்புகளில்  உள்ள இருக்கைகளில் பாஜக கொடியின் வண்ணம் பூசப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் தனது ஆர்.எஸ்.எஸ். கொள்கை, சித்தாந்தங்கள் மற்றும் இந்து மதத்தை மட்டுமே பரப்புவதில் மோடி தலைமையில் அமைந்துள்ள பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது..

உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், போலீஸ் ஸ்டேஷன்களில் காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலம் புதுப்பிக்கப்பட்டு அதற்கு காவி வண்ணம் பூசப்பட்டது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு  கிளம்பவே அது கைவிடப்பட்டது,

தமிழகத்தில் முதன் முறையாக இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 22ம் தேதி அன்று, விழுப்புரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் வகுப்புக்கான தொடக்கவிழா நடைபெற்றது. இதனை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

அங்கு எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகளுக்கு ஏற்றார் போல், கார்ட்டூன்கள் சுவற்றில் வரையப்பட்டிருந்தன. அதில் ஒரு பகுதியாக குழந்தைகள் அமரும் இருக்கைகள் மற்றும் மேஜைகளில்  பாஜகவின்  கொடி வண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் பச்சை மற்றும் காவி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது.

இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் உலாவியதை அடுத்து இச்செயலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து தற்போது பாஜக கொடி வண்ணத்தில் பூசப்பட்ட இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளன.

click me!