உள்ளாட்சி தேர்தலில் சிதறும் வாக்குகள்... இந்த அரசியல் கட்சிகளுக்கு எப்படி வந்தது தனித்து நிற்கும் துணிச்சல்..?

By Thiraviaraj RMFirst Published Sep 16, 2021, 5:41 PM IST
Highlights

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பதைவிட உள்ளூரில் நிற்கும் வேட்பாளரின் சொந்த செல்வாக்கை வைத்தே வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. 

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பல கட்சிகளும் தனித்து களம் காண துணிந்து முடிவெடுத்துள்ளன. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என களமிறங்கியபோதே வாக்கு வங்கி சிதறின. இந்நிலையில் அந்த கூட்டணிகளில் இருந்து பல கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன.

அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து தோல்வியுற்றதால் பாமக தனித்து போட்ட்யிடும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் வட மாவட்டங்களில் கணிசமான வாக்குவங்கி பா.ம.க-வுக்கு உண்டு. ஆகையால் தடாலடியாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது பாமக. 

அதேபோல் தேமுதிகவும் இந்த தனித்து போட்டியிடும் முடிவை அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் தேமுதிகவை கண்டு கொள்ளாததால் கட்சி நேரத்தில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவோடு கை கோர்த்தது. ஆனால் முந்தைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட குறந்த அளவான 0.43% சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற்று எந்தத் தொகுதியிலும் டெபாசிட் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது தேமுதிக. ஆகையால் விட்ட செல்வாக்கை பிடிக்க இப்போது தனித்து போட்டி என்கிற முடிவை எடுத்துள்ளார் விஜயகாந்த்.

 

கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டு வந்தது. இந்த முறையும் அந்த முடிவையே எடுத்துள்ளார் சீமான். ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களது வாக்குவங்கி உயர்ந்து வருகிறது. குறிப்பாக 2021 தேர்தலில் தோல்வியடைந்தாலும் 6.89% வாக்குகளை நாம் தமிழர் பெற்றது. மேலும் தனது பலத்தை நிரூபிக்க சீமான் இந்த முறையும் தனித்து களம் காண்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து நின்றது. அடுத்து சடமன்றத் தேர்தலில் சரத் குமாரின் சமக, பச்சமுத்துவின் ஐ.ஜே.கே-வுக்கு தலா 40 சீட்டுகள் ஒதுக்கியதை சொந்த கட்சியினரே ரசிக்கவில்லை. இதனால் விரக்தியான கட்சியின் முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன், குமரவேல், சந்தோஷ் பாபு ஆகியோர் பொறுப்பில் இருந்து விலகினார்கள். இது கட்சியின் அடித்தளத்தை அசைத்து பார்த்திருக்கிறது. தற்போது கட்சியை பலப்படுத்திவரும் கமல்ஹாசன், பரீட்சை முறையாக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காண்கிறார். ஆகையால் அவரும் தனித்து நிற்கும் முடிவையே எடுத்துள்ளார்.

இதனால் வாக்கு வங்கி சிதறும் என வெளியே கணக்குப்போட்டாலும், உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பதைவிட உள்ளூரில் நிற்கும் வேட்பாளரின் சொந்த செல்வாக்கை வைத்தே வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால் இந்த தேர்தலை கட்சி தொண்டர்கள் நிர்ணயிக்க மாட்டார்கள். ஆகையால் வாக்கு சதவிகிதம் சிதைவதை பற்றிய கவலையும் கட்சிகளுக்கு இல்லை. 

click me!