தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
புதிய காங்கிரஸ்தலைவர் யார் ?
தமிழக காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் எதிராக களம் இறங்கி மோதிக் கொள்ளும் நிலையானது காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே எஸ் அழகிரி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும், காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அதிகரித்திருந்த கோஷ்டி மோதலானது கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
பட்டியலில் யார் முன்னிலை.?
இந்த நிலையில் கே எஸ் அழகிரி சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்காக தலைவர்களை தேர்வு செய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியலில் செல்வப் பெருந்தகை, ஜோதிமணி, செல்வகுமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இறுதியாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவரான செல்வப் பெருந்தகையே தலைவருக்கான ரேசில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
மல்லிகார்ஜுன கார்கேக்கு கடிதம்
இதற்கு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் எதிர்ப்பு தெரிவித்து மல்லிகார்ஜுன கார்கேக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ரஞ்சன் குமார் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வருகிறது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் . அவர் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தொடரட்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை தான் தேர்வு செய்ய வேண்டும் என விரும்பினால், ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை நியமிக்கலாம். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நன் மதிப்பு உள்ளது என இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
வீட்டிற்கு வர வேண்டாம்... தொண்டர்களுக்கு திடீர் கட்டளையிட்ட சசிகலா.! காரணம் என்ன.?