
ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களின் மீதான விசாரணை 2018 ஜனவர் 10ம் தேதி முதல் தொடங்குவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற, ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் வங்கிக் கணக்கு, செல்போன் சேவைகளைப் பெறவும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.
ஆதார் வழக்குகள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரிக்கப்பட்டது. ஆதார் எண் இணைப்பு தொடர்பான இடைக்கால உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என தெரிவித்த உச்சநீதிமன்றம், அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது.