
சென்னை மட்டுமல்ல, தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலும் பரவலாக அலசப்படும் விஷயம், ஆர்.கே.நகரில் யார் ஜெயிப்பாங்க..? அங்கே என்ன தான் நடக்கிறது?
இந்தக் கேள்விகளுக்கான பதில், ஆர்.கே.நகரில் ரவுண்ட் அப் செய்து வரும் யாராலும் கணிக்க முடியாது. காரணம், போட்டி போட்டுக்கொண்டு தொகுதியில் பண மழை பொழிகிறது, அதுவும் மும்முனைத் தாக்குதலாக... என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்! மாதம் மும்மாரி மழை போல், ஆர்.கே.நகரில் மட்டும் டிசம்பர் மாதத்தில் மும்முனைகளில் பண மழை கொட்டுகிறதாம்! இருப்பது ஒரு ஓட்டு என்றாலும், சிறப்பான கவனிப்புக்கு செவி சாய்ப்பாளர்கள் வாக்காளர்கள் என்று எண்ணி, இப்போது அவரவரும் கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இப்படி கருத்துக் கணிப்பை யார் வேண்டுமானாலும் வெளியிடலாமா? பத்திரிகைகள் மட்டுமல்ல, அமைப்புகள் மட்டுமல்ல, தனிநபர்கள் கூட கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என ஆர்.கே.நகர் உறுதி செய்திருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையமும் எந்த விதத் தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வரும் டிச.19ஆம் தேதி மாலை வரை, கருத்து கணிப்புகளை வெளியிடலாம் என தேர்தல் ஆணையம் முன்பே கூறியுள்ளது. ஆக, இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. அவரவரும் ஏதேனும் டேட்டாக்களை கையில் வைத்துக் கொண்டு கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் தான்!
கருத்துக் கணிப்பு என்பதை கருத்துத் திணிப்பு என்பாரும் உண்டு. இவர் தான் வெற்றி பெறப் போகிறார்... எனவே, வெற்றி பெறப் போகும் இவருக்கே உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்ற ரீதியில் செய்யப்படும் பிரசார உத்தி இது. அதற்கு வாக்காளர்கள் பலரும் அடிமையாவதும் உண்டு. தோற்பவனுக்கு ஏன் நம் வாக்கைப் போட்டு வீணாக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்களைத் தூண்டி விட இந்த உத்தி உதவும்.
இப்போதும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் வெல்வார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பை வழக்கம் போல், உள்ளடி வேலைகளைப் பார்க்கும் லயோலா கல்லூரி நடத்தி வெளியிட்டது. அதில், எதிர்பார்த்த படியே, பண நாயகம் வென்றது. அடுத்தடுத்த இடங்களை பணத்துக்குத் தகுந்தாற்போல் இருப்பவர்கள் இடம் பிடித்தார்கள். லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் வெளியானதும், ''கருத்துக் கணிப்புகள் தேவையே இல்லை. நாங்கள் மக்களையே நம்புகிறோம்,'' என்றார் திமுக., வேட்பாளர் மருதுகணேஷ். 90 சதவீத தோழமைக் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது திமுக,விற்கு கூடுதல் பலம் என்றார் அவர்.
லயோலாவின் அதிகாரபூர்வ பணநாயகக் கருத்து கணிப்பு சரியாகப் படவில்லை போலும், அதன் பேராசிரியர் ராஜநாயகம் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டார். அதற்காக, ஏதோ அறிவியல் பூர்வமான முறைகளை எல்லாம் அவர் எடுத்து வைத்தார். ஆனால், புள்ளியியல் படித்த மாணவர்கள், சாம்ப்ளிங் என்பதன் பொருள் உணர்ந்த எவருமே, கருத்து கணிப்பு குறித்து தெளிவான கருத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். தேர்தலுக்காக என்று மட்டும் அல்ல, எந்த ஒரு நிறுவனத்தின் ஒரு பொருளை சந்தைப் படுத்தும் போதும், அல்லது எந்த ஒரு சேவை குறித்தும் கேட்கப் படும் கேள்விகளுக்கு இந்த சோதனையில் பங்கேற்பவர்கள் அளிக்கும் பதிலை வைத்து மனநிலையைக் கருத்தில் கொண்டு, ஒரு முடிவை அறிவிப்பது இதன் செயல்பாடு. ஆனால், இதில் கலந்து கொள்பவர் அனைவரும் நேர்மையான பதிலை அளிப்பவர் என்று சொல்ல முடியாது. அதே போல், கருத்துக் கணிப்பை நடத்துபவரும் நேர்மையானவர் என்று சொல்ல முடியாது. அது கேட்கப் படும் கேள்விகளை வைத்தே கணித்து விடலாம்.
தென்ன மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டும் என்று ஒரு ஒரு சொலவடையை கிராமப்புறங்களில் சொல்வார்கள். அது போல், ராஜ நாயகம் என்பவர் கேட்க கேள்விகளும் அதன் மூலம் பெறப்பட்ட பதில்களும் அவரின் உள்நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. குமரியில் அடித்த ஓக்ஹி புயலால், ஆர்.கே.நகரில் மக்கள் எல்லோரும் முடங்கிப் போய் கடும் எதிர்ப்பை காட்டப் போகிறார்கள் என்ற ஆசையை, குமரி மாவட்ட பாதிரியார்கள் தலைமையில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து எப்படி ஒரு போராட்டத்தை நடத்தினார்களோ அதன் பிரதிபலிப்பாக, ராஜநாயகம் என்பவரும் ஆர்.கே.நகரில் நடத்தி விட்டார்.
நடப்பது இடைத்தேர்தல். இப்போதெல்லாம் தமிழகத்தில் சாலை சரியில்லை, குடிநீர் வரவில்லை, குளம் நிரம்பவில்லை, விளக்கு எரியவில்லை என்றெல்லாம் குறை சொல்லிக் கொண்டு அதை தேர்தலில் பிரதிபலிக்கச் செய்யும் வாக்காளர்கள் இல்லை. எனவே, ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ, பணநாயகத்தைக் காட்டி வெல்லும் முனைப்பை கொண்டு வந்து விட்டன. இதை, திருமங்கலம் ஃபார்முலா என்று கட்டம் கட்டி வைத்து விட்டார்கள் தமிழகத்தில். திருமங்கலம் ஃபார்முலா பற்றி அறிந்தவர்கள், ஆர்.கே.நகரைக் குறை சொல்ல மாட்டார்கள்!
ராஜநாயகத்தின் ஆய்வு முடிவுகள் இவை.... பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மையத்தின் சர்வே முடிவுகளில் தினகரனே வெல்வார் என்று தெரிகிறது. ஆர்.கே.நகரில் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையத்தின் 27 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. 156 தெருக்களில் 3120 வாக்காளர்களை சந்தித்து இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் மத்திய பாஜக, தமிழக அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித் தும், ஓக்கி புயலில் மத்திய- மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்திலுமே மத்திய- மாநில அரசுகள் மீது மிக மிக கடும் அதிருப்தியையே வாக்காளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். ஒன்றரை ஆண்டுகால அதிமுக ஆட்சி படுமோசம் என்பது 73.3% பேர் கருத்து. சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லை என 22.1% பேரும் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என 4% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்தியில் நடைபெறக் கூடிய பாஜக படுமோசம் என 85.6% பேர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே இல்லை என 7.9% பேரும் சிறப்பான ஆட்சி என 6.2% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் ஓகி புயலைக் கையாண்ட விதம் ஆர்.கே.நகர் தொகுதியில் யாருக்கும் நிறைவைத் தரவில்லை. இந்தப் புயலை மத்திய- மாநில அரசுகள் கையாண்ட விதம் படுமோசம் என 93.5% பேர் கூறியுள்ளனர். சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே செய்யவில்லை என 6.5% கூறியுள்ளனர். சிறப்பாக செயல்பட்டது என ஒருவர் கூட சொல்லவில்லை.
வலியத் திணிக்கப் பட்ட இந்தக் கேள்விகளையும் பெறப்பட்ட பதில்களையும் பார்க்கும் போதுதான், ராஜநாயகம் என்பவர் சந்தேகத்துக்கு உரியவர் ஆகிறார். அந்த சந்தேகம், லயோலா கல்லூரி நிர்வாகத்துக்கும் வந்துவிட்டதோ என்னவோ... ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து லயோலா கல்லூரி சார்பில் எந்த ஒரு கருத்துக்கணிப்பும் வெளியிடவில்லை என்று அந்த கல்லூரி அறிவித்து விட்டது.
லயோலா கல்லூரியின் பெயரில் எந்தக் குழுவினர் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டாலும் அதற்கு கல்லூரி பொறுப்பேற்காது என்று அந்த கல்லூரியின் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டு விட்டார். இது நாள் வரை கருத்துக் கணிப்புகளுக்கு பொறுப்பேற்று வந்த கல்லூரி நிர்வாகம், ஏன் திடீரென்று தன் பொறுப்பில் இருந்து கழன்று கொள்ள வேண்டும்?
சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்துக்கணிப்பில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் வெற்றி பெறுவார் என்றும், அவரை அடுத்து தினகரன் பெருவாரியான வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது. முன்னாள் மாணவர்கள் என்ற போர்வையில் செயல்படுபவர்கள் திமுக., ஆதரவினர் என்பதால், ஆர்.கே.நகரில் ரவுண்டு கட்டி வரும் குக்கருக்கு ஒரு விசில் சத்தத்தைக் கொடுக்க ஏதாவது செய்து நெருப்பு மூட்டியாக வேண்டுமே என்ற பரபரப்பில் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் ஒரு குழு கருத்துக் கணிப்பு நடத்தி, தினகரனை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
ராஜநாயகம் தலைமையிலான குழுவினர் நடத்திய கருத்துக்கணிப்பில், டிடிவி தினகரன் 35.5% வாக்குகள் பெற்று பெறுவார் என்றும் அவருக்கு அடுத்த இடத்தை திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 28.5% வாக்குகளை பெறுவார் என்றும் வெளியானது. அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனுக்கு 21.3% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 4.6% வாக்குகளும், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 1.5% வாக்குகளையும் பெற்று 5வது இடத்தை பிடிப்பார் என்றும் தகவல் வெளியானது.
இந்தக் கருத்துக்கணிப்பு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுயேட்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெறுவாரா? அதற்குப் பின்னர் என்ன நடக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது.
இந்த நிலையில் லயோலா கல்லூரி சார்பாக எந்தக் கருத்துக் கணிப்பும் நடத்தவில்லை என்று அந்தக் கல்லூரியின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. லயோலா கல்லூரியின் பெயரில் எந்த குழுவினர் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டாலும் அதற்கு கல்லூரி பொறுப்பேற்காது என்று அந்தக் கல்லூரியின் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அப்படி என்றால், கருத்துக் கணிப்பையே அவர்கள் கை கழுவியிருக்க வேண்டும்! இத்தனை நாள் இல்லாமல் இப்போது மட்டும் கல்லூரியின் பெயரைப் பயன்படுத்துவதில் தடை போட வேண்டுமென்றால், கல்லூரி முதல்வருக்கு என்ன நெருக்கடியோ என்று பலரும் கேட்பதற்கு உரிய பதிலை கல்லூரி முதல்வர் கொடுத்தாக வேண்டும்!
எப்படியோ, நாமும் கூட கருத்துக் கணிப்புகளை நடத்தலாம்பா.. என்று சமூக வலைத்தளங்களில் பலரும் குறுநகை புரிய குதூகலத்துடன் பதிவுகளை இட்டு வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சொல்வது ஒன்றுதான்...! இன்னும் 5 நாள் இருக்கு! டிசம்பர் 19ம் தேதியே கடைசி...! நீங்களும் களத்தில் இறங்குங்கள் என்பதே!