சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலைச்சம்பவம்... ஸ்டாலினை மிஞ்சும் கனிமொழி அரசியல்...!

By Thiraviaraj RMFirst Published Jul 1, 2020, 5:18 PM IST
Highlights

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போதாவது சூழலை உணர்ந்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா என திமுக தூத்துக்குடி எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போதாவது சூழலை உணர்ந்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா என திமுக தூத்துக்குடி எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தனர். இவர்கள் இருவரையும் கடந்த 19-ம் தேதி இரவு கைது செய்த போது, சாத்தான்குளம் காவல்துறையினர் கொடூரமான முறையில் தாக்கியதால் தான் இருவரும் சிறையில் உயிரிழந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை, மகன் உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணத்தில் அப்பட்டமான மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது" என குற்றம்சாட்டியிருந்தார்.

இதேபோல் பல்வேறு தரப்பிலிருந்தும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கடிதங்கள், கோரிக்கைகள் சென்றன. இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக டிஜிபி, சிறைத்துறை ஐஜி, தூத்துக்குடி எஸ்.பி., கோவில்பட்டி கிளைச் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இன்று  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்தின் பின்னணியை விசாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது குறித்தும், காவல்துறையினரின் அத்துமீறலாலேயே அவர்கள் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் கொல்லப்பட்டது குறித்த நமது புகாரை ஏற்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக டிஜிபி,தூத்துக்குடி எஸ்.பி., கோவில்பட்டி சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முதல்வர் பழனிசாமி இப்போதாவது சூழலை உணர்ந்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா?" என பதிவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விட கனிமொழி விரைவாகவும், தெளிவாகவும் களத்தில் இறங்கி விளையாடி வருகிறார். 

click me!