போயஸ் கார்டனில் மீண்டும் சசிகலா.! பிரம்மாண்ட பங்களாவில் கிரகப்பிரவேஷம்- சூடு பிடிக்கும் அரசியல் களம்

By Ajmal KhanFirst Published Jan 24, 2024, 10:11 AM IST
Highlights

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீடு அருகிலேயே பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டுப்பட்டுள்ள பங்களாவில் சசிகலா குடியேறியுள்ளார். இனி அரசியல் களம் சூடு பிடிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். 

போயஸ் கார்டனில் மீண்டும் சசிகலா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் வசித்து வந்தார். 1967 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அம்மாவால் 1.32 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வீடு தான் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம். 24,000 சதுர அடி பரப்பு உள்ள இந்த வீடு பல கோடி ரூபாய் மதிப்புடையது. இந்த வீட்டில் ஜெயலலிதாவுடன் அவரது தோழிலான சசிகலாவும் 30 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வசித்து வந்தனர்.

2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு மறைந்த நிலையில், அந்த வீடு அரசுடமையாக மாற்றப்பட்டு நினைவு இல்லமாக தொடர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வேதா இல்லம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

முடக்கப்பட்ட சொத்துக்கள்

இதன் காரணமாக சசிகலா தியாகராய நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் சசிகலா சென்னை போயஸ் தோட்டத்தில் வேதா இல்லத்திற்கு அருகிலேயே மிகப்பெரிய அளவில் வீடு கட்டினார். அப்போது அமலாக்கத்துறை வீடு முன்பு ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டியது. இதனால் போயஸ் இல்லத்தில் மீண்டும் குடியேறும் நிகழ்வு தடைபட்டது. இதனை தொடர்ந்து  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சசிகலா தொடர்பான ரூ1,520 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்தது அமலாக்கத்துறை, இதனை தொடர்ந்து  ரூ480 கோடி அபராதத் தொகையை சசிகலா செலுத்தியுள்ளார். இதன் காரணமாக  இதுவரை முடக்கப்பட்ட சசிகலாவின் அத்தனை சொத்துகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. 

கிரகப்பிரவேஷம் செய்த சசிகலா

இதனை தொடர்ந்தே போயஸ் இல்லம் கட்டுமானப்பணி விரைவாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், இன்று காலை அந்த வீட்டில் கிரகப்பிரவேஷம் நடைபெற்றுள்ளது. புதிய வீட்டில் இன்று அதிகாலை கோபூஜை மற்றும் விநாயகர் வழிபாடு சசிகலா நடத்தினார். தொடர்ந்து இல்லத்தில் பால் காய்ச்சும் நிகழ்வு  நடைபெற்றது. இந்த நிகழ்வில் சசிகலாவிற்கு நெருக்கமானவர்கள், உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது வரை அரசியலில் அமைதி காத்து வந்த சசிகலா தனது தோழியான ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்திலேயே குடியேறியது அரசியலில் இனி வேகமெடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை, மணிமண்டபம்; அடிக்கல் நாட்டினார் சசிகலா
 

click me!