காந்தியின் பங்களிப்பை ஆயிரம் ஆர்.என். ரவிக்கள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது- கே.எஸ்.அழகிரி

By Ajmal KhanFirst Published Jan 24, 2024, 8:57 AM IST
Highlights

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பா.ஜ.க. என்ற கரைபடிந்த வரலாறை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

ஆளுநர் சர்ச்சை கருத்து- காங்கிரஸ் எதிர்ப்பு

சுதந்திர போராட்டம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யின் சர்ச்சை கருத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு வரலாற்றுத் திரிபு வாதங்களை செய்வதோடு, தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் கலாச்சாரத்தை  சிறுமைப்படுத்துகிற வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 127-வது பிறந்தநாள் விழாவை ஆளுநர் மாளிகையில் கொண்டாடுகிற போர்வையில் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்களையே கொச்சைப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார். அதில் அவர் பேசும் போது, ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, 

பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

காந்தி- நேதாஜி நட்பு

நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என்று காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துகளை கூறிய இவரை இந்திய விடுதலைப் போராட்ட தேசபக்தர்களின் ஆன்மா மன்னிக்காது. இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை 1885 இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. தென்னாப்பிரிக்க கருப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடி வரலாறு படைத்த மகாத்மா காந்தி 1915 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க  முன்வந்த போது, அவரது தலைமையை நாடு ஏற்றுக் கொண்டது. அவரது வழிகாட்டுதலின்படி அகிம்சை வழியில் சத்தியத்தை கடைபிடித்து ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்ட வழிமுறைகளின் மூலம் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களை திரட்டியதில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை ஆயிரம் ஆர்.என். ரவிக்கள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது. 

ஆர்.என் ரவிக்கு கண்டனம்

மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் தொடங்கிய போது சிங்கப்பூர் வானொலியில் மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோருகிற வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசும் போது, ‘தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள், இன்ப துன்பங்களிலும், வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன். இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்” என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை, இந்தியா எங்கும் எதிரொலித்தது. அப்போது அவர்கள் பயன்படுத்திய கொடி என்பது காங்கிரஸ் மகாசபை ஏற்றுக் கொண்ட கைராட்டை சின்னம் பொறித்த மூவர்ண கொடி தான் என்பதை அரைவேக்காடு ஆர்.என். ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

காந்தியின் மூலமாகவே விடுதலை பெற்றது

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுபாஷ் சந்திரபோஸ் தொடுத்த போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இரண்டாவது உலகப் போரில் சுபாஷ் சந்திரபோசை ஆதரித்த நாடுகள் தோல்வியடைகிற நிலை ஏற்பட்ட போது, இவரது முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள்.  150 ஆண்டு கால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சையில் வழியில் போராடித் தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத் தான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், 

துரும்பை கூட ஆர்எஸ்எஸ், பாஜகக போடவில்லை

ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபை வழிவந்த பாரதிய ஜனதா கட்சியினர். சுதந்திரம் பெற்று ஆகஸ்ட் 15, 1947 மற்றும் ஜனவரி 27, 1950-க்கு பிறகு ஜனவரி 26, 2022 வரை 52 ஆண்டுகள் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பா.ஜ.க. என்ற கரைபடிந்த வரலாறை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது. இதன்மூலம் ஆர்.என். ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

நேதாஜியே தேசத்தந்தை: ஆளுநர் ஆர்.என்.ரவி புதுக்குண்டு!

click me!