அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை தொகுதி..? எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை..!

By Asianet TamilFirst Published Feb 6, 2021, 9:31 AM IST
Highlights

பெங்களூருவிலிருந்து சசிகலா சென்னை திரும்ப உள்ள நிலையிலும் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணிக்கு பாமக அழுத்தம் தரும் நிலையிலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று அவரசமாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த மாதம் 27-ம் தேதி விடுதலையானார். ஆனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், பெங்களூரு மருத்துவமனையிலேயே இருந்தார். சிகிச்சை முடிந்து பிறகு, கர்நாடக அரசின் வழிகாட்டுதல்படி பெங்களூருவில் ஒரு வாரம் சசிகலா தங்கியிருந்து ஓய்வு எடுத்துவருகிறார். நாளை மறுதினம் சசிகலா சென்னைக்கு திரும்ப உள்ளார். 
இதற்கிடையே சசிகலா விடுதலையான நாளிலிருந்தே பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுகவினர் அவரை வரவேற்று போஸ்டர்கள் அடித்து ஒட்டிவருகிறார்கள். அவ்வாறு போஸ்டர் அடித்து ஒட்டும் நிர்வாகிகளை கட்சியை விட்டு அதிமுக தலைமை நீக்கி வருகிறது. மேலும் சசிகலா தன்னுடைய காரில் அதிமுக கட்சி கொடியைப் பயன்படுத்தியது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். சசிகலா சென்னை திரும்பிய பிறகு அதிமுகவை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார் என்று டிடிவி தினகரன் கூறிவருகிறார்.


இந்தச் சூழ்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சசிகலா வருகைப் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. 
மேலும் பாமகவை கூட்டணியில் தக்கவைக்க அக்கட்சி இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும் 40 தொகுதிகள் வரை பாமக கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றியும் பிற கட்சிகளுக்கு கூட்டணியில் ஒதுக்க வேண்டிய தொகுதிகள் பற்றியும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்ப்படுகிறது. 
 

click me!