
ஜெ மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் கேள்விகளுக்கு சசிகலா தன்மீது யார் புகார் அளித்தது என பதில் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணை ஆணையம் அளிக்கும் விவரத்தின்படி 15 நாட்களில் பதிலளிக்க தயாராக உள்ளோம் எனவும் சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
இதில் சசிகலா மற்றும் ஜெயலலிதா உறவினர்களிடம் விசாரணை ஆணையம் விசாரித்து வருகின்றது. இதில் சிறையில் உள்ள சசிகலாவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதில், ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அவர் நேரில் ஆஜராக முடியாவிட்டாலும், தனது தரப்பு வழக்கறிஞர் மூலம் அவர் பதிலளிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் எனவும், அவரின் சார்பில் அவரின் வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் ஆணையத்தில் ஆஜராகி ஆறுமுகசாமியின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பதிலளித்துள்ளார்.
ஆணையம் அனுப்பிய சம்மனில் சசிகலா நலனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றால், யார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் என்ற விவரத்தை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
விசாரணை ஆணையம் அளிக்கும் விவரத்தின்படி 15 நாட்களில் பதிலளிக்க தயாராக உள்ளோம் எனவும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.