ஊடக வெளிச்சம்..! தோல்வியில் முடிந்த சின்னம்மாவின் பிஆர் ஸ்டன்ட்..!

By Selva KathirFirst Published Jul 20, 2021, 10:44 AM IST
Highlights

தொண்டர்களுடன் செல்போனில் உரையாடியது கூட ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஆங்கில இதழுக்க அடித்த பேட்டி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி போன்ற முயற்சிகள் சசிகலாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.

தொடர்ந்து ஆடியோக்களை வெளியிட்டு ஊடகங்களை பரபரப்பாக வைத்திருந்த சசிகலா அடுத்ததாக ஆங்கில இதழ் மற்றும் தனியார் தொலைக்காட்சி மூலம் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்க நினைத்த நிலையில் அது தோல்வியில் முடிந்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் முடிந்த கையோடு தீவிர அரசியல் களத்திற்கு வருவதற்கான ஆயத்தப்பணிகளில் சசிகலா இறங்கியுள்ளார். கடந்த முறை அவரோடு இருந்த பலர் இந்த முறை இல்லை. இதனை அடுத்து புதிய டீமோடு அவர் களம் இறங்கியுள்ளார். சசிகலா தனது மறைந்த கணவர் நடராஜனின் சகோதரர்கள் ஆலோசனையின் பெயரில் செயல்பட்டு வருவதாக சொல்லப்பட்டாலும் சீனியர் ஊடகவியலாளர்கள் சிலர் சசிகலாவிற்கு தற்போது ஆலோசனை கூறி வருவதாக சொல்லப்படுகிறது. அவர்களின் ஆலோசனை மற்றும் ஊடகத் தொடர்புகள் மூலமாகவே சசிகலா தொண்டர்களுடன் பேசிய ஆடியோவை லைம் லைட்டிலேயே வைத்திருக்க முடிந்ததாக கூறுகிறார்கள்.

அதிலும் தனியார் தொலைக்காட்சி ஒன்று ஜெயா தொலைக்காட்சியையே ஓரம் கட்டும் அளவிற்கு சசிகலாவின் ஆடியோ உரையாடல்களை செய்தியாக வெளியிட்டு வந்தது. இதற்கான காரணம் கடந்த வாரம் தெரியவந்தது. அந்த தொலைக்காட்சிக்கு நேரடியாக பேட்டி ஒன்றையும் சசிகலா கொடுத்திருந்தார். அந்த பேட்டிக்கு அந்த தொலைக்காட்சி தரப்பில் இருந்து பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் சசிகலாவின் தொலைக்காட்சி பேட்டி தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவரது ஆதரவு பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகளால் தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால் பேட்டி ஒளிபரப்பாகி இரண்டு மூன்று நாட்கள் கடந்தும் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை.

சசிகலா அந்த பேட்டியில் கூறியது, அதற்கு முன்பு ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி போன்ற அனைத்தும் கம்பி கட்டும் கதையை போல் இருந்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சசிகலா கூறியது உண்மையாகவே இருந்தாலும் கூட அதனை உறுதிப்படுத்த வலுவான ஆதாரங்களை அவர் வெளியிடவில்லை. இதனால் வழக்கமாக சசிகலா என்ன செய்தாலும் ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்கள் கூட அதனை கண்டுகொள்ளவில்லை. இதனிடையே தொடர்ந்து மேலும் சில தொலைக்காட்சிகளை சசிகலா தரப்பே தொடர்பு கொண்டு பேட்டி கொடுப்பது பற்றி பேசி வருவதாக கூறுகிறார்கள். இதனிடையே ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி போல் தன்னை விளம்பரப்படுத்த சில ஊடகவியாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஒரு பிஆர் ஸ்டன்ட் போலவே சசிகலா செயல்பாடுகள் இருந்து வருவதாக கூறுகிறார்கள்.

தொண்டர்களுடன் செல்போனில் உரையாடியது கூட ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஆங்கில இதழுக்க அடித்த பேட்டி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி போன்ற முயற்சிகள் சசிகலாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள். இதே போல் பிரபல யூட்யூப் சேனல்கள் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை சசிகலா தும்மினால் கூட அதனை பயங்கர பில்டப்புகளுடன் செய்திகளாக வெளியிட்டன. ஆனால் தற்போது சாதாரண யூட்யூப் சேனல்கள் கூட சசிகலா பற்றிய செய்திகளை கண்டுகொள்வதில்லை. இதற்கு காரணம் சமூக வலைதளங்களில் சசிகலா மீதான எதிர்பார்ப்பு குறைந்தது தான் என்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு வரை சசிகலா பற்றிய செய்திகளுக்கு லட்சக்கணக்கில் வியூஸ்கள் கிடைத்த நிலையில் தற்போது சில ஆயிரங்கள் கூட கிடைப்பதில்லை என்கிறார்கள்.

இதனால் சசிகலாவே இதுநாள் வரை இலவசமாக புரமோட் செய்து வந்த யூட்யூப் சேனல்களும் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே சசிகலா வேறு ஏதேனும் புரபசனல் பி ஆர் டீமை ஒப்பந்தம் செய்யலாமா என்கிற யோசனையில ஆழ்ந்துள்ளதாக அவரது தரப்பில் இருந்து தகவல்கள் வருகின்றன.

click me!