சொத்து குவிப்பு வழக்கு - சசிகலா சீராய்வு மனு நாளை விசாரணை!!

First Published Aug 1, 2017, 4:42 PM IST
Highlights
sasikala petition investigation supreme court


சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா சீராய்வு மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோகிண்டன், பாலிநாரிமன், அமிர்தவராய் ஆகியோர் விசாரணை செய்கின்றனர்.

கடந்த 1991 முதல் 1996  வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015-ம் ஆண்டு கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்தார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

கடந்த ஆண்டு ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைதொடர்ந்து சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோகிண்டன், பாலிநாரிமன், அமிர்தவராய் ஆகியோர் விசாரணை செய்கின்றனர்.

click me!