
சசிகலாவின் இரண்டாவது அண்ணன் விநோதகனின் மூத்த மகன் மகாதேவன். ஒரு காலத்தில், சர்வ வல்லமையுடன் போயஸ் தோட்டத்தில் வலம் வந்தவர்.
ஜெயலலிதா பேரவை செயலாளராக பதவி வகித்து, பின்னர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு, அதன் பின்னர் முழுவதுமாக விரட்டி அடிக்கப்பட்டார்.
எதையும், அடாவடியாக செய்யக்கூடியவர் என்றும் துடுக்குத் தனமானவர் என்றும் இவரைப்பற்றி கூறப்படுவதுண்டு.
1996 ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், ஜெயலலிதா மீது பல ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்டு, அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் எல்லாம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது, சில வழக்குகளில் தொடர்புடைய ஆடிட்டர் ராஜசேகரன் என்பவரை, மகாதேவன் தாக்கிய வழக்கில், அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
தஞ்சாவூரில் வசித்து வரும் மகாதேவனுக்கு, சொந்தமாக மருத்துவமனை உள்ளது. பல பேருந்துகளும் இயங்குகின்றன.
ஒரு காலத்தில் தஞ்சை பகுதியில், மகாதேவன் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அந்த அளவுக்கு, அதிமுக ஆட்சியில், அவர் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார்.
2011 ம் ஆண்டு, சசிகலா மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதா, அவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தவும் உத்தரவிட்டார்.
அப்போது, மகாதேவன் வீட்டில் இருந்து எண்ணற்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அத்துடன், மறைந்த மகாதேவன் மீது, நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் இருந்தன.
தஞ்சை, விளார் பகுதியை சேர்ந்த அமலோற்பவமேரி என்பவரின் இரண்டு கிரவுண்டு நிலத்தை அபகரித்த புகாரில், சசிகலா கணவர் நடராஜன், உறவினர் இளவழகன், மகாதேவன் ஆகிய மூன்று பேர் மீதும் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2011 ம் ஆண்டு ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்ட பிறகு, அவர் உயிருடன் இருந்த வரை மீண்டு மகாதேவனை சேர்க்கவே இல்லை. தற்போது, தினகரன் பொது செயலாளராக பொறுப்பேற்ற பின்னரும், அவரை ஒதுக்கியே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.