Sasikala: ரஜினிக்கு அப்புறம் முக்கிய அரசியல் தலைவரை சந்திக்க ரெடியாகும் சசிகலா…? ஜெர்க்கில் அதிமுக…

By manimegalai aFirst Published Dec 11, 2021, 7:16 PM IST
Highlights

நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து விஜயகாந்தை சந்திக்கும் நடவடிக்கைகளில் சசிகலா இறங்கிவிட்டதாக ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தை உலுக்க ஆரம்பித்து இருக்கிறது.

சென்னை:  நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து விஜயகாந்தை சந்திக்கும் நடவடிக்கைகளில் சசிகலா இறங்கிவிட்டதாக ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தை உலுக்க ஆரம்பித்து இருக்கிறது.

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, சிறை தண்டனை, கொரோனா தொற்று என தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வந்த சசிகலா திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்க அந்த விஷயம் பெரும் பேசு  பொருளாக மாறியது. அவரது முடிவை அறிந்த ஆதரவாளர்களும், அமமுகவினரும் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.

ஆனால் அதற்கு அடுத்து அதிமுக முகாமில் நடக்கும் விஷயங்கள் தொடர்ந்து விவாததிற்கு உள்ளாகின. சட்டசபை தேர்தல் தோல்வி, அதிமுக தலைமையின் முக்கிய தலைவர்கள் சசிகலாவுக்கு எதிராக பேசுவது, சசிகலாவுக்கும் அதிமுகவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று பேட்டிகள் அளிப்பது, சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கும் நபர்களை கட்சியில் இருந்து கட்டம் கட்டுவது என நடவடிக்கைகள் பாய்ந்தன.

தொடரும் இந்த அதிரடி அரசியலால் சசிகலா ஆதரவாளர்களும், அமமுக தொண்டர்களும் சோர்ந்து போயிருந்த தருணத்தில் ரஜினிகாந்தை சந்தித்து அதிரடி காட்டி இருக்கிறார் சசிகலா. அவரின் சந்திப்புக்கான திரைமறைவு காரணங்கள் என பல செய்திகள் கசிந்து பரபரக்க வைத்தன.

போயஸ் கார்டனில் நிகழ்ந்த சந்திப்பின் பின்னணியே அமித் ஷாவிடம் சசிகலாவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேச வேண்டும் என்பதே என்றும் கூட தகவல்கள் காற்றில் பறந்தன. ஆனால் அது குறித்து உறுதியாக தகவல்கள் இல்லாததால் அந்த சந்திப்பின் உள்ளார்ந்த நோக்கம் என்ன என்பது குறித்து பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை.

ஆனால், ரஜினியை தொடர்ந்து அடுத்து சசிகலா யாரை சந்திக்க இருக்கிறார் என்பது பற்றிய தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. அதில் மிக முக்கியமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரிடையாக சென்று சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சசிகலாவின் இந்த முடிவுக்கு பல காரணங்கள் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் அடிக்கோடிட்டு காட்டுகின்றனர். ஜனவரி 24ம் தேதி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய ஒரு விஷயத்தை முன்வைத்து அவர்கள் உதாரணம் காட்டுகின்றனர்.

அவர் பேசியது இதுதான்: சசிகலா பெண் என்ற முறையில் அவருக்கு எனது ஆதரவு உண்டு. அவரது விவகாரம் தொடர்பாக அதிமுக நல்லதொரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று மிகவும் வெளிப்படையாக தமது ஆதரவை வெளிக்காட்டினார்.

அத்தோடு அவர் சொன்ன முக்கியமான விஷயம்… அன்று சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் இன்று அவரையே வேண்டாம் என்று கூறுவது என்பது வருத்தம் தருகிறது என்றும் பேசியிருந்தார். மேற்சொன்ன இந்த விஷயங்களை முன் வைத்து தான் சசிகலா மீது தேமுதிகவுக்கு இருக்கு பரிவு (soft corner) என்று குறிப்பிட்டு விரைவில் விஜயகாந்துடன் சசிகலா சந்திப்பு என்ற சேதி வெளியாகும் என்கின்றனர்.

ரஜினிகாந்த் சந்திப்பை தொடர்ந்து விஜயகாந்துடன் சந்திப்பு என்பது தற்போது உள்ள அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சசிகலா நினைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை அறிக்கைகள், ஆடியோ அரசியல், நினைவிட பயணம் என்று அரசியல் ஸ்டைலை சற்றே மாற்ற நினைக்கும் எண்ணத்தின் வெளிப்பாடே இனி முக்கிய பிரமுகர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்திப்பது என்கின்றனர் சகிகலாவின் நடவடிக்கைகளை அறிந்தவர்கள்.

சசிகலாவின் இந்த நடவடிக்கை குறித்து அவரது ஆதரவாளர்களுக்கும், அமமுகவினருக்கும் தகவல் தெரிய வந்துள்ளதால் அவர்களும் ஏக சந்தோஷத்தில் இருக்கின்றன. கூடிய விரைவில் அவரின் அரசியல் அதிரடிகள் அணிவகுக்கும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். என்ன நடக்கிறது என்பது அடுத்த வரக்கூடிய சில நாட்களில் தெரிந்துவிடும் என்ற போதிலும், ஓபிஎஸ், இபிஎஸ் முகாம் சற்றே அதிர்ந்து போயிருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!!

click me!