செல்லாத நோட்டுகளை மாற்ற ரூ.237 கோடியை 6 பைசா வட்டிக்கு விட்ட சசிகலா... குடோனுக்குள் நடந்த தில்லாலங்கடி..!

By Thiraviaraj RMFirst Published Dec 24, 2019, 3:04 PM IST
Highlights

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக சசிகலா, அரசு காண்டிராக்டர்களுக்கு ரூ.237 கோடி கடன் கொடுத்தது வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தின் நமது எம்.ஜி.ஆர் கட்டடத்தில் 2017 நவம்பர் மாதம் 9ம் தேதி வருமான வரிதுறை நடத்திய சோதனையில் இந்த பணப்பரிமாற்றம் பற்றி கையால் எழுதப்பட்ட துண்டுச் சீட்டை கைப்பற்றியதில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்கிற தகவல் கிடைத்தது.

 

அந்த விசாரணையில் சசிகலாவின் உறவினர் வி.எஸ்.சிவகுமார் மூலம் இந்த பணம் மாற்றப்பட்ட விபரமும் தெரிய வந்துள்ளது.  இந்த சிவகுமார் ஹரிசாந்த்ரா எஸ்டேட் நிறுவனத்தை டி.நகரில் நடத்தி வருகிறார். இந்தப்பணம் அனைத்தும் நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்தில் வைத்து பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  237 கோடி ரூபாயை மாற்ற 7.5 கோடி கமிஷனாகவும் வழங்கப்பட்டுள்ளது.     

இந்த காலகட்டத்தில் ரூ.1,674.50 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்தார். 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை இந்த பணபரிமாற்றம் நடந்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த காலகட்டத்தில் சசிகலா தன்னிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இது 2017-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தெரிய வந்தது.

எந்த எந்த சொத்துக்களை யாரிடம், எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்பதும், இதில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு கைமாறியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சசிகலாவின் நெருங்கிய உறவினர் சிவகுமார் மூலம் பல்வேறு பணபரிமாற்றங்கள் நடந்துள்ளது.

சொத்துக்கள் வாங்கியது தவிர வேறு விதமாகவும் செல்லாத பணத்தை புதிய நோட்டாக மாற்ற ஏற்பாடு செய்துள்ளார். பலருக்கு இந்த பணத்தை பைனான்ஸ் செய்து அதில் இருந்து வட்டி பெற ஏற்பாடு செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. அரசு காண்டிராக்டர்கள் தங்கள் தொழிலுக்கு முன்பணமாக கடன் பெறுவது உண்டு. இதை பயன்படுத்தி சசிகலா,  அரசு பள்ளிகளுக்கு பருப்பு சப்ளை செய்யும் நிறுவனத்தின் அதிபர் குமாரசாமிக்கு பழைய நோட்டுகளில் ரூ.237 கோடியை பழைய நோட்டுகளாக கொடுத்துள்ளார்.

அரசு கட்டிடங்கள், அரசு உதவி பெறும் பள்ளி கட்டிடங்கள் மற்றும் அரசு டெண்டர்களை எடுத்த காண்டிராக்டர்களுக்கு ரூ.240 கோடி கடனாக கொடுக்க பேரம் பேசப்பட்டது. இதில் ரூ.237 கோடி ரூபாய் செல்லாத ரூபாய் நோட்டுகளாக கொடுக்கப்பட்டது. இந்தப் பணத்துக்கு ரூ.7.5 கோடி கமி‌ஷனாக பெறப்பட்டது. பணத்தை ஒரு வருடத்துக்குள் திருப்பித் தர வேண்டும். தாமதமானால் 6 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இந்தப் பணம் கொடுக்கப்பட்டது.

பின்னர் இந்த பணம் ஒப்பந்ததாரர்கள் மூலம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு சசிகலா பினாமிகள் மூலம் புதிய பணமாக மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி ரூ.101 கோடியும், அதே ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி ரூ.136 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வருமான வரித்துறை விசாரணையில்  தெரிய வந்துள்ளது.

click me!