"சசிகலா உயிருக்கு ஆபத்து.... சிறை மாற்றப்படுமா?" - வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனை

 
Published : Feb 16, 2017, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
"சசிகலா உயிருக்கு ஆபத்து.... சிறை மாற்றப்படுமா?" - வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனை

சுருக்கம்

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு மத்திய சிறையான பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா, தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது:-

சிறைக் கைதிகள் சிறை மாற்றச் சட்டம் 1950 பிரிவு 3ன்கீழ், தமிழக அரசின் சம்மதத்துடன் கர்நாடக அரசு, சசிகலாவை பெங்களூரு மத்திய சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றலாம்.

இந்த சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை சந்திக்க அவரது ரத்த சொந்தங்களுக்கு உரிமை உள்ளது. இந்த அடிப்படையில், தனது சொந்த ஊர் தஞ்சாவூர் என்பதால், உறவினர்கள் அங்குதான் உள்ளனர். அவர்கள் தன்னைச் சந்திக்க வெகுதூரம் வர வேண்டியுள்ளது.

இதற்காக தன்னை தமிழகத்தில் உள்ள சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கர்நாடக மாநிலத்திடம் சசிகலா வேண்டுகோள் விடுக்கலாம். மேலும், தன்மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகள் சென்னை எழும்பூரில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்குகளின் விசாரணைக்கு கர்நாடகாவில் இருந்து அடிக்கடி செல்வது கடினம். அதனால் தன்னை சென்னையில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோர முடியும். 
மேலும், ஒரு வயதான பெண் என்பதாலும், தனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளது என்பதால் தனக்கு சிகிச்சை செய்யும் மருத்துவர்களை சென்னையில் இருந்து வரவழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தன்னை சென்னையில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் சசிகலா கர்நாடக அரசிடம் கோரிக்கை விடுக்கலாம்.

இந்த கோரிக்கைகளை கர்நாடக அரசு, தமிழக அரசின் ஒப்புதலை பெற்று நிறைவேற்றலாம். அப்போது, சசிகலா தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு சிறைக்கு மாற்றம் செய்யப்படுவார்.

இந்த கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தன்னை சிறை மாற்றம் செய்ய உத்தரவிடக்கோரி சசிகலா மனுத் தாக்கல் செய்ய முடியும்.

குறிப்பாக சமீபத்தில் மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணனை கடத்தியது தொடர்பாக கூவத்தூர் போலீஸ், ஆள்கடத்தல், மிரட்டல், சிறு காயம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி உள்பட சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது.

இந்த வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சிறை மாற்றும் உத்தரவை தமிழக போலீசார் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பெற்று சசிகலாவை இந்த வழக்கு முடியும் வரை புழல் சிறையில் வைக்கவும் வாய்ப்புள்ளது.

அதேபோல், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு வரும்போது தன்னை தாக்க சிலர் முற்பட்டு கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பெங்களூரில் தனக்கு பாதுகாப்பு இல்லை. அதனால், தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் சசிகலா கர்நாடக அரசிடம் கோரமுடியும் என கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு