
சசிகலாவை இனிமேல் தனது சகோதரி என அழைக்கப்போவதில்லை எனவும் அவர் தனது முன்னாள் சகோதரி எனவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்டெடுப்பேன் என்ற உறுதியுடன் செயல்பட்டுவரும் தினகரன், அதுவரை அரசியல் ரீதியிலான செயல்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்திவருகிறார்.
இதற்கிடையே சசிகலாவின் சகோதரர் திவாகரன், தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதோடு, தினகரன் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்தார். அவற்றிற்கெல்லாம் தினகரன் தரப்பும் பதிலடி கொடுத்துவந்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் சசிகலாவின் குடும்பத்தினர் மீது பல வழக்குகள் போடப்பட்ட போதும், ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு, சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த மெகா ஐடி ரெய்டின் போதும் சசிகலாவின் குடும்பத்தினர் ஒற்றுமையுடன் இருந்து அவற்றையெல்லாம் எதிர்கொண்டனர். பல வழக்குகள், மெகா ஐடி ரெய்டு ஆகிய சோதனைகளை எல்லாம் ஒற்றுமையுடன் எதிர்கொண்ட குடும்பத்தில் தற்போது பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகலாவின் பெயரை பயன்படுத்தக்கூடாது என சசிகலா தரப்பிலிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள திவாகரன், என் மீது உள்ள ஆதங்கத்தில் எனக்கு மனநலம் சரியில்லை என தினகரன் கூறியுள்ளார். சசிகலா எனக்கு நோட்டீஸ் அனுப்பியதால், எங்கள் அரசியல் பயணம் இத்துடன் நின்றுவிடாது. சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன். அவர் எனது முன்னாள் சகோதரி என திவாகரன் தெரிவித்துள்ளார்.