
தமிழகத்தில், இந்த நூற்றாண்டின் இணையற்ற ராஜ தந்திரி என்று அரசியல் நோக்கர்களால் பேசப்படுபவர் சசிகலா.
கட்சியிலும், ஆட்சியிலும் சொல்லிக்கொள்வதுபோல் எந்தப் பொறுப்பிலும் இல்லாத, சசிகலாவின் கண் அசைவுகளுக்கு ஏற்பவே அதிமுகவும், அதிமுக ஆட்சியும் இயங்கின.
அவர் கட்சியை வளர்க்க அரும்பாடு படவில்லை. மக்கள் பிரச்சினையை முன்வைத்து எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. மக்கள் போராட்டத்திற்காக சிறைக்கும் செல்லவில்லை.
ஆனாலும், ஒரு வலுவான கட்சி மற்றும் ஆட்சியின் லகான் தமது கையை விட்டு நழுவி விடாத அளவுக்கு பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் அவரிடம் இருந்தது.
அதிகாரத்தை மட்டும் குறிவைத்து, மக்கள் செல்வாக்கை பெற முடியாத பல பேருக்கு, இருக்கும் பலவீனம், நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற பெயரில் சிலரை உயர்ந்த பதவியில் அமர்த்துவது.
பன்னீர்செல்வம் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. அதுதான் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் பன்னீர்செல்வத்தின் வடிவில் பேராபத்தாக முடிந்துள்ளது.
ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்தபோது, முதல்வராக இருந்த பன்னீர் உள்பட, எந்த அமைச்சரும், உயர் அதிகாரிகளும் அவரை பார்க்க முடியவில்லை.
அப்போதெல்லாம், யாரும் அதைப்பற்றி வாய் திறக்கவும் இல்லை. சின்னம்மா சொல்வதே அவர்களுக்கு வேத வாக்காக இருந்தது.
மருத்துவமனையில் உள்ள, முதல்வர் படத்தை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய கருணாநிதி அவர்களால் "நாகரீகம் அற்றவர்" என்றே விமர்சிக்கப்பட்டார்.
இன்றைக்கு கட்சியின் சட்ட திட்டங்களை சொல்லி, சசிகலாவின் பொது செயலாளர் தேர்வு செல்லாது என்று, வாய் கிழிய கத்தும், பன்னீர் அந்த விஷயத்தை அப்போது சசிகலாவிடம் அதை கூறவில்லை.
வானகரத்தில் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விவரத்தை சின்னம்மாவிடம் கொடுத்து, காலில் விழுந்து, நீங்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது பன்னீர்தான்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதெல்லாம் பதவி சுகத்தில் மிதந்த பன்னீர்செல்வம், அம்மாவை பார்த்தே தீர வேண்டும் என்று சசிகலாவிடம் அடம் பிடிக்காமலே இருந்தார்.
சசிகலா பொது செயலாளர் ஆகும் வரை பொறுத்துக்க கொண்ட பன்னீர்செல்வம், அவர் முதல்வர் நாற்காலியை நெருங்கிய பொது மட்டும்தான் பொங்கி எழ ஆரம்பித்தார்.
அதுவரை அம்மாவின் மரணத்தில் மர்மம் இருப்பது தெரியாத பன்னீர்செல்வம், அதன் பிறகு அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.
இன்றும், அம்மாவின் மரணத்தால் ஏற்பட்ட இடைத்தேர்தல் அல்ல, இது அம்மாவின் மரணத்திற்கு நீதி கேட்கும் தேர்தல் என்றுதான் , ஆர்.கே.நகரில் இடைவிடாமல் முழங்கி வருகிறார்.
இவை அனைத்துக்கும், ஜெயலலிதா இல்லாத நிலையில், முதல்வர் பதவியை அவர் யாருக்கும் விட்டு தர விரும்பவில்லை என்பதே காரணமாகும்.
ஆரம்பத்தில் இருந்தே, சசிகலாவை வில்லியாக பார்த்து பழகிவிட்ட தமிழக மக்களுக்கு, ஜெயலலிதாவின் இறப்பு விஷயத்தில் அவர் மீது ஆத்திரம் இன்னும் தீரவில்லை.
ஒரு நபரின் மீது மக்கள் கொண்டுள்ள கோபமே, மற்றொரு நபருக்கு வெற்றியை வழங்குகிறது அண்மைக்கால தேர்தல் முடிவுகள் சொல்லும் வரலாறு.
இந்த பார்முலாவின் அடிப்படையில்தான், சசிகலா மீதுள்ள வெறுப்பை, சாதமாக்கி ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற செயல் திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறார் பன்னீர்செல்வம்.
அதற்கு, மத்திய அரசின் ஆதரவும் அதிகமாகவே இருக்கிறது. எனவே, இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்பதில் பன்னீர்செல்வம் மிகவும் கவனமாகவும், உறுதியாகவும் இருக்கிறார்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற வாய்மொழியை பறைசாற்றும் விதத்தில், வில்லியாகவே அறியப்பட்ட சசிகலாவை எதிர்ப்பதன் மூலம், வில்லாதி வில்லனான பன்னீர்செல்வம் இன்று கதாநாயகன் ஆகிவிட்டார்.
அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு ஆதரவு வழங்க தயாராகி விட்டனர்.
வளர்த்த கிடாவான பன்னீர்செல்வம் மார்பில் பாயும்போது, அதை அடக்க முடியாமலும், சமாளிக்க முடியாமலும் தவித்து வருகிறது சசிகலா குடும்பம்.
இதுதான், பன்னீரை வளர்த்து கண்ணீரை அறுவடை செய்யும் சசிகலா குடும்பத்தின் கதை.