
தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் தாக்கலின்போது சசிகலா, தினகரன் பெயரை நிதியமைச்சர் ஜெயகுமார் கூறியதால், திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் 2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் ஜெயகுமார், வாசிக்க தொடங்கினார்.
அப்போது, வழக்கம்போல் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். அதில் சிறையில் உள்ள அதிமுக பொது செயலாளர் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் புகழ்ந்து பேசினார். இதற்கு, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
ஆனால், அதனை சிறிதும் பொருட்படுத்தாமலும், காதில் வாங்காமலும், நிதியமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட் உரையை பேசி முடித்தார். இதனால், சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து கலாட்டா நிலவியதால், படிக்க முடியாமல் திணறினார் நிதியமைச்சர் ஜெயகுமார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரது பெயரை, எப்படி அவையில் குறிப்பிடலாம் என கூறினார்.
மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளையே சட்டப்பேரவையில் விவாதிப்பதில்லை. ஆனால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை எப்படி உச்சரிக்கலாம் என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அவை குறிப்பில் இருந்து, சசிகலா பெயரை நீக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதில் அளித்த அவை முன்னவர் செங்கோட்டையன், சட்டமன்ற நடைமுறையில் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. இது ஒன்றும் புதிதல்லா என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, அவை குறிப்பில் இருந்து சசிகலா பெயரை நீக்க முடியாது என சபாநாயகர் தனபால் கூறியதால், தொடர்ந்து திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.