திமுக உடன் சேர ரெடி ஆனால் ஒரு கண்டிஷன்... நாட்டாமை வைக்கும் டிவிஸ்ட்!

First Published Jul 11, 2018, 11:41 AM IST
Highlights
sarathkumar said i will be join hand with dmk


கூட்டணியாக அல்லாமல் மக்கள் பிரச்சினைக்காக பொதுவான மேடை அமைத்தால், திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கலந்துகொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு நேற்று  சென்ற சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அங்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சமக ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் இப்தார் நோன்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதற்காக அவர்களுக்கு சரத்குமார் நன்றி தெரிவித்தார். சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “இதுபோன்ற சந்திப்புகள் நிகழும்போது கூட்டணி குறித்துப் பேச வந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தல் 2019இல் தான் நடைபெறவுள்ளது. இது கூட்டணிக்கான சந்திப்பு இல்லை. நாங்கள் ஒரே கருத்துள்ளவர்கள் என்பதன் அடிப்படையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் தமிழகத்தில் உள்ள பேச்சுரிமை, கருத்துரிமை குறித்து கலந்தாலோசித்தோம்” என்று தெரிவித்தார்.

வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி திமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் சமக கலந்துகொள்ளுமா என்ற கேள்விக்கு, “எங்களுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. வந்த பின்பு அதுகுறித்து ஆலோசனை நடத்தி உரிய முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

திமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் ஒரே கருத்துடன் மாநிலப் பிரச்சினைகளுக்காக இணைந்து போராடி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அவர்களோடு இணைந்து செயல்படுவதில் ஏதாவது தயக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, “கூட்டணி நோக்கி அல்லாமல், மக்கள் பிரச்சினைக்காகப் போராடுவதற்கு பொதுவான மேடை அமைத்தால், அந்த மேடையில் கலந்துகொள்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது” என்று பதிலளித்தார்.

click me!