
சரத் யாதவ் – நிதிஷ்குமார்இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவைத் தலைவர் பதவி வகித்த சரத் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர். ஆனால், லாலு குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. ஊழல் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்தது.
இதையடுத்து, தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தியும், அவர் பதவி விலகவில்லை. இதனால் நிதிஷ்குமார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைதொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சராவே பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவரது முடிவுக்கு ஐக்கிய ஜனதா தள தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்தார்.
இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் சரத் யாதவ் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு லாலுவுடன் கூட்டணி குறித்து பேசவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாநிலங்களவை கட்சித் தலைவர் பதவியில் இருந்து சரத் யாதவை நீக்கி ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஆர்.பி.சிங் மாநிலங்களவை கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த கடிதத்தை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஐக்கிய ஜனதா தளம் இன்று அளித்தது.
ஐக்கிய ஜனதா தளத்துக்கு மாநிலங்களவையில் மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நிதிஷ்குமாரின் ஆதரவாளரான ஆர்.பி.சிங், மாநிலங்களவை அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த எதிர்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய ஜனதா தள எம்.பி. அலி அன்வர் அன்சாரி நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.