பேருந்துவழித்தடங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் விரைவில் சலோ ஆப் செயலி.. போக்குவரத்து துறை அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published May 13, 2021, 1:19 PM IST
Highlights

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்களின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அனைவரும் பயன் பெறுகின்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  

பொது மக்களின் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிட நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என அனைத்து போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வேண்டுகோள் விடுத்தார். தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்  போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தலைமையில் இன்று மாநகரப் போக்குவரத்துக்கழக தலைமை கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் அனைத்து போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்கள், இயக்க ஊர்திகள் இயக்குனர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிதி மேம்பாட்டு நிறுவனம், சாலைப் போக்குவரத்து நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள், செலவீனங்களை குறைத்து, நிதி நிலையை மேம்படுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டில் நடைமுறைகளைப் பின்பற்றி, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து, பாதுகாப்பான முறையில் பேருந்துகளை இயக்குதல், போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்துதல், மத்திய அரசின் நிர்பயா திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல், நிலுவையில் உள்ள பணியாளர்களின் பதவி உயர்வு மற்றும் ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்குதல், பணிமனைகள் பழுது நிவர்த்தி செய்து புதுப்பித்தல் மற்றும் கிராமப்புற மக்களின் போக்குவரத்து தேவைகளை ஈடு செய்கின்ற வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.  அப்போது போக்குவரத்து துறை அமைச்சர்கள் உரையாற்றியதாவது: 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள், கடந்த 7-5-2021 அன்று பொறுப்பேற்ற உடனே, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றிட உத்தரவிட்டார்கள். குறிப்பாக நகரப் பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பு செய்தார்கள்,  தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்துக் கழக 6,628 நகர்ப்புற பேருந்துகளிலும் அடுத்தநாளே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது பணிபுரியும் பெண்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மகளிர் உள்ளிட்ட அனைத்து பெண்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் தற்போது 1,400 சாதாரண கட்டண பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு பல வழித்தடங்களில் விரைவில் விரிவுபடுத்தப்படும். குறிப்பாக திருநங்கையர் பயன் பெறுகின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் கலந்து பேசி ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்களின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அனைவரும் பயன் பெறுகின்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பேருந்துகளில் பயணம் செய்கின்ற பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில் மத்திய அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிர்பயா திட்டத்தின் வாயிலாக அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பொதுமக்கள் தங்கள் கைபேசி வாயிலாக பேருந்து வழித்தடங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சலோ ஆப் செயலியை விரைந்து செயல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள்.  கடந்த ஆட்சிக் காலங்களில் முறையாக திட்டமிடல் இல்லாத காரணத்தினால் தொடர்ந்து போக்குவரத்து கழகங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இதுபோன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் உறுதியான தீர்வு காணப்படும். அதேபோல ஊழியர்கள் திறம்பட பணியாற்றி பொதுமக்களுக்கு தரமான போக்குவரத்து சேவையை வழங்குவதிலும், பயணியர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு இந்த அரசுக்கும் பெருமை சேர்க்க அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். 

 

click me!