
கொடநாடு ஜெயலலிதா பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளை நடக்கப்பட்ட வழக்கில் மலையாள கரையோரம் சென்று, கெண்டை மீன்களை பக்கெட் நிறைய அள்ளி வருவதுபோல் கூலிப்படை குற்றவாளிகளை அள்ளி வந்து விசாரிக்கிறது தமிழக போலீஸ். குளிருக்கு இதமாக போலீஸ் கொடுக்கும் செம ச்சூடு ட்ரீட்மெண்டில் வேறு யார் யாருக்கெல்லாம் இந்த கிரிமினல் வேலையில் தொடர்பிருக்கிறதென்று கக்குகிறாகள் அவர்கள்.
இது ஒரு புறமிருக்க கொடநாடு பங்களாவிற்கு பர்னிச்சர் சாமான்களை சப்ளை செய்யும் நபராக அறிமுகமாகி பிறகு சின்னம்மா வகையறாவினருக்கு ஓவர் நெருக்கமான புள்ளியாக வளர்ந்தார் சஜீவன் என்பவர்.
இவரும் மலையாளியே. கிட்டத்தட்ட ஒரு பவர் சென்டராகவே உருவெடுத்தார் சஜீவன். அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் இவரைப் பார்த்து கூழை கும்பிடு வைக்குமளவுக்கு விஸ்வரூபமெடுத்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பதை நிர்ணயித்ததே இவர்தான் என்கிறார்கள் நீலகிரி அ.தி.மு.க.வினர். அந்த வேட்பாளர் கலைச்செல்வன் தி.மு.க. வேட்பாளரிடம் மோசமான தோல்வியை தழுவியபோதும் கூட ஜெ.,வின் கோபப்பார்வைக்கு ஆளாகாமல் சஜீவன் எஸ்கேப் ஆகியதும் சின்னம்மாவின் ஆசியால்தான் என்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் கொடநாட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு பின்னனியில் இந்த சஜீவன் இருப்பதாக தமிழகமெங்கும் ஒரு பேச்சு கிளம்பியது.
இதை கிளப்பிவிட்டதே அ.தி.மு.க. புள்ளிகள்தான். சஜீவனும் இந்த சமயத்தில் வளைகுடா நாடுகளில் பயணத்தில் இருந்ததால் இந்த பேச்சு வலுப்பெற வசதியாகி போனது.
இந்த சூழலில் இப்போது தமிழகம் திரும்பியிருக்கும் சஜீவன் ‘எனக்கும் இந்த கொலைக்கும், கொள்ளைக்கும் எந்த சம்பதமுமில்லை. வேண்டுமென்றே என்னை இதில் இழுத்துவிட்டு அவதூறு கிளப்புகிறார்கள். சட்ட ரீதியாக எதையும் சந்திக்க தயார்.” என்று சொல்லியிருக்கிறார்.
போலீஸ் இதை நம்புகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.