
தமிழ்நாட்டில் காவிக்கு என்ன பலம் உள்ளது என்று தெரியவில்லையென தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கோவையில் சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ் கல்லூரி மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். விழாவில் அவர் பேசுகையில், "என்னை பற்றி யார் என்ன சொன்னாலும், என்ன எழுதினாலும் நான் துணிச்சலோடுதான் இருக்கிறேன். அதற்கு காரணம் மக்கள் சேவை, தமிழ் சேவை, ஆன்மிக சேவை ஆகியவற்றை நான் செய்து வருவதுதான். கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். காவி ஆன்மிகத்தை குறிக்கிறது.
எனவேதான் தமிழகத்தில் காவி பெரியதாகவும், வலிமையாகவும் உள்ளது. நான் தேசியக் கொடியில் உள்ள காவியையும், அடிகளார்கள் அணிந்திருக்கும் காவியையும்தான் கூறுகிறேன் "என்று தமிழிசை சவுந்தராஜன் பொடி வைத்து பேசினார். பொதுவாக ஆளுநர்கள் அரசியல் பேசமாட்டார்கள். ஆனால், காவியைப் பற்றி ஆளுநர் தமிழிசை மறைமுகமாகப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே தமிழிசையின் கருத்துக்கு தமிழக காங்க்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில்," காவிதான் வலிமையானது என ஓர் ஆளுநர் கூறியுள்ளார். காவி ஒரு போதும் வலிமையானதாக இருந்தது இல்லை. வெண்மைதான் வலிமையானது. தமிழ்நாட்டில் காவிக்கு என்ன பலம் உள்ளது என்று தெரியவில்லை" என அவர் கூறியுள்ளார்.