சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனு விசாரணை.... ஜனவரியில் தொடக்கம் ....

By Selvanayagam PFirst Published Dec 23, 2019, 11:09 AM IST
Highlights

2020 ஜனவரியில் அதாவது அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரபலமானது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஐயப்ப பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து சபரிமலை வந்து அய்யப்பனை தரிசனம் செய்து விட்டு செல்வர். சபரிமலையில் பெண்களும் சென்று வழிபடலாம். 

ஆனால் 10 வயதுக்குள் அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலை சென்று அய்யப்பனை வழிபட முடியும். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தவற்கு தடை உள்ளது. 

இந்த தடை பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தல் வழக்கு தொடரப்பட்டது. 

இதனையடுத்து கடந்த ஆண்டு அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து கடும் பாதுகாப்புக்கு இடையே ஒரு சில பெண்கள் மட்டுமே சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தனர். 

சபரிமலை செல்ல முயன்ற பெரும்பாலான பெண்கள் கடும் எதிர்ப்பு காரணமாக பாதி வழியில் திரும்பினர். இதற்கிடையே உச்ச  நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

கடந்த நவம்பர் 14ம் தேதி மறுசீராய்வு மனுக்களை பரிசீலனை செய்த அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு அந்த மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, சபரிமலை விவகாரம் தொடர்பான மறுசீராய்வு மனுக்களை வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சபரிமலை விவகாரத்திலும் விரைவில் ஒரு தெளிவான முடிவு கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!