சபரீசன் VS மாறன் சகோதரர்கள்! களம் இறக்கப்பட்ட தருமபுரி செந்தில்! திமுகவில் அதிகார யுத்தம்!

By Selva KathirFirst Published Jan 1, 2021, 10:56 AM IST
Highlights

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் யார் நெருக்கம் என்கிற போட்டியில் அவரது மருமகன் சபரீசன் மற்றும் சன் டிவி மாறன் சகோதரர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் யார் நெருக்கம் என்கிற போட்டியில் அவரது மருமகன் சபரீசன் மற்றும் சன் டிவி மாறன் சகோதரர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க கடந்த 2014ம் ஆண்டு முதலே தீவிரமாக பணியாற்றி வருபவர் சபரீசன். அதற்கு முன்பு வரை திமுக நிர்வாகிகள் தான் கட்சியை வழிநடத்தி வந்தனர். ஆனால் சபரீசன் கார்ப்பரேட் ஸ்டைலில் மோடி, ராகுல் போன்றோரை பின்பற்றி திமுகவிற்கு தேர்தல் வியூக வகுப்பாளராக சுனில் என்பவரை அழைத்து வந்தார். இவரை ஏற்க திமுக தலைவர் கலைஞர் மறுத்துவிட்டார். இதனால் சுனிலை மு.க.ஸ்டாலினுக்கான தனிப்பட்ட வியூக வகுப்பாளராக பணியில் அமர்த்தினர். இதன் அடிப்படையில் சுனில் கொடுக்கும் ஐடியாக்களின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் செயல்பட ஆரம்பித்தார்.

ஆனால் 2016 தேர்தலில் திமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. இருந்தாலும் கூட சுனில் – சபரீசன் இணைந்து ஸ்டாலினை வழிநடத்தி வந்தனர். இந்த நிலையில் சுனிலுக்கு ஒரு காலத்தில் பாஸ் ஆக இருந்த பிரசாந்த் கிஷோர் திமுகவுடன் இணைந்து செயல்பட சம்மதித்தார். இதனால் சுனில் ஸ்டாலின் தரப்பிடம் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். தற்போது சபரீசன் – பிரசாந்த் கிஷோர் இணைந்து திமுகவை வழிநடத்துகின்றனர். அந்த வகையில் இவர்கள் சொல்வதை கேட்டே ஸ்டாலின் தனது நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார்.

இதே போல் மாறன் சகோதரர்களும் ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வரும் போது தங்கள் தொழில் தொடர்புகளை பெருக்க ஸ்டாலின் தயவு தேவை என்பதால் அவருக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் உதயநிதி ஸ்டாலினின் தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தை கவனித்துக் கொள்வதும் மாறன் சகோதரர்கள் தான் என்கிறார்கள். உதயநிதியை மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்துவதன் மூலம் ஸ்டாலினிடம் நெருக்கத்தை தொடரலாம் என்று மாறன் சகோதரர்கள் கருதுகிறார்கள். ஆனால் இதனை சபரீசன் விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்.

மாறன் சகோதரர்கள் எப்போதுமே நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை என்பது சபரீசனின் நிலைப்பாடு. ஆனால் ஊடக ஜாம்பவான்கள் மற்றும் பண பலம் போன்றவை அவர்களை எப்போதும் ஸ்டாலினுக்கு நெருக்கமாக வைத்திருக்கிறது. இதனை எப்படியேனும் உடைக்க வேண்டும் என்று சபரீசன் கருதுகிறார். அதோடு உதயநிதி தற்போது முன்னிலைப்படுத்தப்படுவன் பின்னணியில் மாறன் சகோதரர்கள் உள்ளனர் என்றும் இந்த சமயத்தில் உதயநிதியை முன்னிலைப்படுத்துவது திமுகவிற்கு பின்னடவை ஏற்படுத்தும் என்று சபரீசன் கருதுகிறார்.

ஆனால் உதயநிதியை முன்னிலைப்படுத்தினால் சபரீசனின் முக்கியத்துவம் குறையும் என்று மாறன் சகோதரர்கள் கணக்கு போட்டு வருகிறார்கள். இந்த சூழலில் தான் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புரமோட் செய்ய வெற்றி நடைபோடும் தமிழகம் என்கிற பெயரில் ஒரு விளம்பரம் தயார் செய்துள்ளனர். அந்த விளம்பத்தில் எடப்பாடி பழனிசாமியை நிர்வாகத் திறமை மிக்கவர்,அ வர் தலைமையில் தமிழகம் நம்பர் 1 இடத்தில் இருப்பதாக காட்சிகள் உள்ளன. இந்த விளம்பரத்தை சன் டிவி ஒளிபரப்பி வருகிறது. இது சபரீசனுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவி திமுக ஆதரவு தொலைக்காட்சியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. மாறன் சகோதரர்களில் இளையவரான தயாநிதி மாறன் திமுக எம்பியாக உள்ளார். திமுக சார்பில் மத்திய அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்று இருந்தார். இப்படியான நிலையில் அவர்களின் சன் டிவியில் எடப்பாடி பழனிசாமியை புரமோட் செய்து விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது சபரீசனை டென்சன் ஆக்கியுள்ளது. ஏற்கனவே மாறன் சகோதரர்கள் தொடர்பாக தனதுஅதிருப்தியை ஸ்டாலினிடம் பல முறை சபரீசன் கூறியுள்ளார். ஆனால் விளம்பரம் ஒளிபரப்புவது அவர்கள் தொழில், நாம் ஏன் அதில் தலையிட வேண்டும் என்கிற ரீதியில் ஸ்டாலின் பதில் அளித்து வந்தார். இந்த நிலையில் தான் வெற்றி நடை போடும் தமிழகம் விளம்பரத்தை வைத்து சபரீசன் தனது ஆட்டத்தை ஆடியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தும் வெற்றி நடை போடும் தமிழகம் விளம்பரம் சன் டிவியில் ஒளிபரப்பப்படுவதற்கு எதிராக தருமபுரி திமுக எம்பி செந்தில் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். சன்டிவி தங்களுக்கு தொழில் தான் முக்கியம் என்றால் திமுகவுடனான தொடர்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வெளிப்படையாக ட்வீட் செய்துள்ளது திமுகவினரையே அதிர வைத்துள்ளது. திமுகவில் இருந்து கொண்டு அதுவும் ஒரு சிட்டிங் எம்பி மாறன் சகோதரர்களுக்க எதிராக பொதுவெளியில் கருத்து தெரிவிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

ஸ்டாலினுடன் மிக நெருக்கமாக இருக்க கூடியவர்கள் மாறன் சகோதரர்கள். அவர்களின் ஊடக பலம் ஊருக்கே தெரிந்தது. திமுக ஆட்சியில் இருந்த போது ஈரோடு அமைச்சராக இருந்த என்.கே.கே.பி ராஜாவிற்கு எதிராக தொடர்ந்து சன் டிவியில் செய்திகளை ஒளிபரப்பி அவரது பதவியை காலி செய்தவர்கள்  மாறன் சகோதரர்ர்கள். இப்படி அசுர பலத்துடன் இருக்கும் அவர்களை சாதாரண எம்பியான செந்தில் எதிர்த்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஆனால் இதன் பின்னணியில் சபரீசன் இருப்பது பலரும் அறியாத ஒன்று. சபரீசனுக்கு தருமபுரி செந்தில் மிக மிக நெருக்கம்.

செந்திலை தருமபுரி திமுக வேட்பாளராக்கியது சபரீசன் தான். மேலும் செந்தில் வெற்றியை அங்கு உறுதிப்படுத்த சபரீசன் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார். இதனால் தான் பாமகவின் கோட்டையான தருமபுரியில் அன்புமணியை செந்திலால் எளிதாக வீழ்த்த முடிந்தது. மேலும் கட்சியில் தனது விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக் கொள்ளவும் செந்தில் போன்றவர்களை சபரீசன் பயன்படுத்திக் கொள்வார். அந்த வகையில் சன்டிவியின் வெற்றி நடை போடும் தமிழகம் விளம்பரத்தை ஸ்டாப் செய்ய வேண்டும், மாறன் சகோதரர்கள் மீது ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்த வேண்டும் என்று சபரீசன் போட்ட திட்டம் தான் செந்தில் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தருமபுரி செந்தில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக போட்ட ட்வீட் திமுக தொண்டர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செந்திலை பலர் வெளிப்படையாக பாரட்டி வருகின்றனர். இதே போல் திமுக நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து செந்திலை தொலைபேசியில் அ ழைத்து வாழ்த்து கூறுகின்றனர். இது போதாது என்று செந்திலுக்கு ஆதரவாக பலர் திமுக தலைமையை தொடர்பு கொண்டு அவர் கூறுவது சரி தான் சன் டிவியில் எடப்பாடியின் விளம்பரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக சன்டிவி விளம்பரம் போடுவது நமக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எடப்பாடியின் விளம்பரம் அதற்கு கட்சியினர் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு அதோடு தருமபுரி செந்தில் ட்விட்டரில் எழுப்பியுள்ள போர்க்கொடி அதற்கு அவருக்கு கிடைத்துள்ள ஆதரவுகளை பட்டியலிட்டு ஸ்டாலினை சந்தித்துள்ளார் சபரீசன். மாறன் சகோதரர்களை அழைத்து கண்டிக்கவில்லை என்றால் தேர்தல் சமயத்தில் அவர்களின் நிலைப்பாடு திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அவர்களை ஏன் நாம் உடன் வைத்திருக்க வேண்டும் என்கிற ரீதியில் ஸ்டாலினிடம் சபரீசன் பேசியுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விரைவில் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்கிறார்கள்.

அதே சமயம் அதிமுகவின் விளம்பரத்தை அடிப்படையாக வைத்து தங்களுக்கு எதிராக ஸ்டாலினிடம் நடைபெற்று வரும் எதிர் லாபியை சமாளிக்க வழக்கம் போல் ஒரு சில துருப்புச் சீட்டுகளை மாறன் சகோதரர்கள் தயார்படுத்தி வைத்திருப்பதாகவும், ரஜினியை அரசியலுக்கு வராமல் தடுத்ததில் தங்களின் பங்கு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை எடுத்து ஸ்டாலினின் மனதை மாற்ற மாறன் சகோதரர்களும் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளனர் என்கிறார்கள்.

click me!