இந்திய மக்களுக்கு ரஷ்ய தடுப்பூசி, பேச்சுவார்த்தை மும்முரம்: பக்கவிளைவுகள் ஏற்படுவதாக அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Sep 18, 2020, 1:38 PM IST
Highlights

ஸ்பூட்னிக் - வி  தடுப்பூசியைப் பயன்படுத்திய 58 சதவீத மக்கள் ஊசிபோடும் இடத்தில் வலி இருப்பதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் 50 சதவீதம் பேர் அதிக காய்ச்சல் ஏற்படுவதாகவும், 42 சதவீதம் பேருக்கு தலைவலி வருவதாகவும், 28% பேர் பலவீனம் ஏற்படுவதாகவும், 24 சதவீதம் பேர் தசைவலி இருப்பதாகவும் புகார் கூறியுள்ளனர்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஸ்பூட்னிக் - வி  மீண்டும் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசியை பயன்படுத்திய ஒவ்வொரு ஏழு தன்னார்வலர்களின் ஒருவருக்கு பக்கவிளைவு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.  இத்தகவலை ரஷ்யாவின் சுகாதாரத்துறை அமைச்சர்  மிகைல் முராஷ்கோ  அவர்களே தெரிவித்துள்ளார்.  உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் தடுப்புசி எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த  ஆகஸ்ட் 15 அன்று ரஷ்யாவின் கமலயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பூட்னிக் - வி  என்ற தடுப்பூசியை  அறிமுகப்படுத்தியது. 

அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் தடுப்பூசியை அறிமுகம் செய்தார். மேலும், தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாகவும், தனது மகளுக்கு தடுப்பூசியைப் பயன்படுத்திய பின்னரே இதை மக்களின் பயன்பாட்டிற்கு அறிவிப்பதாகவும் அவர் கூறினார். ரஷ்யாவின் இந்த தடுப்பூசி குறித்து ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சந்தேகம் எழுப்பினர். அதேபோல் அந்த தடுப்பூசியில் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் கேள்விக்குறியாக உள்ளதாகவும், மீண்டும் அதை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆரம்பத்திலேயே சர்ச்சையை எதிர்கொண்ட இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் நிறைவடையாத நிலையில் அதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தடுப்பூசி தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட  ஒவ்வொரு ஏழு தன்னார்வலர்களில் ஒருவருக்கு அது பக்கவிளைவு ஏற்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. அதற்கான தகவலை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர், மிகைல் முராஷ்கோ வெளியிட்டுள்ளார்.  மாஸ்கோ டைம்சுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கூறியிருப்பதாவது, தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சுமார் 14 சதவீதம் பேர் அதன் பக்கவிளைவுகளை சந்தித்துள்ளனர். தடுப்பூசி எடுத்த பிறகு ஏழு பேரில் ஒருவர் பலவீனம் மற்றும் தசை வலி போன்ற பக்கவிளைவுகளை சந்தித்துள்ளார். இருப்பினும் இந்த பக்க  விளைவுகள் ஏற்பட்ட மறுநாளே அது குணப்படுத்த பட்டதாகவும் முராஷ்கோ கூறியுள்ளார். இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் ஆரம்ப முடிவுகள் செப்டம்பர் 4 அன்று தி லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசி 76 பேருக்கு இரண்டு பகுதிகளாக வழங்கப்பட்டது. ஸ்புட்னிக்-வி முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் 21 நாட்களில் தன்னார் வலர்களின் உடலில் ஆன்டிபாடிகளை இது உருவாக்குவதுடன், பக்க விளைவுகள் இல்லாமல் செயல்படக் கூடியது எனவும் தெரிவித்து ள்ளார். தடுப்பூசி முடிவுகள் குறித்து தி லான்செட் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ஸ்பூட்னிக் - வி  தடுப்பூசியைப் பயன்படுத்திய 58 சதவீத மக்கள் ஊசிபோடும் இடத்தில் வலி இருப்பதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் 50 சதவீதம் பேர் அதிக காய்ச்சல் ஏற்படுவதாகவும், 42 சதவீதம் பேருக்கு தலைவலி வருவதாகவும், 28% பேர் பலவீனம் ஏற்படுவதாகவும், 24 சதவீதம் பேர் தசைவலி இருப்பதாகவும் புகார் கூறியுள்ளனர். 

 

தடுப்பூசி எடுத்த 42 நாட்களுக்குள் தன்னார்வலர்களின் உடலில் காணப்படும் அறிகுறிகள் மிகச்சிறியவை என்றும், அவற்றில் கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி பரிசோதனையின் போது இது போன்ற பக்கவிளைவுகள் காணப்படுவது வழக்கம் தான் என்றும், அந்த ஆய்வின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்திய மக்களுக்கு ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக் - வி யை போடுவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,  சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் மூலம் சுமார் 10 கோடி தடுப்பூசி  அளவுகளை வழங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட பட்டுள்ளன. இந்த செயல்முறை சோதனை முடிந்த பின்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி வழங்கப்படும், இத் தடுப்பூசியை வழங்குவதற்கு முன் இந்தியாவிலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!