ஊரக உள்ளாட்சித் தேர்தல்... அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமனம்.. 100 சதவீத வெற்றிக்கு திமுக அதிரடி திட்டம்.!

By Asianet TamilFirst Published Aug 8, 2021, 9:47 PM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க திமுக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து எல்லா அரசியல் கட்சிகளும் இத்தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. இந்த மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100 சதவீதம் வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

 
இந்நிலையில் இந்த 9 மாவட்டங்களில் தேர்தலை எதிர்க்கொள்ள திமுகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கள்ளக்குறிச்சிக்கு எ.வ.வேலு, தென்காசிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருநெல்வேலிக்கு ஐ.பெரியசாமி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதர மாவட்டங்களுக்கும் இதேபோல பொறுப்பாளர்களை நியமிக்க திமுக முடிவு செய்திருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு முதல் தேர்தல் இது என்பதால், 100 சதவீத வெற்றியை மு.க.ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலை எதிர்கொள்ள திமுக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

click me!