இந்த இரண்டில் ஒன்று இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி..!

By vinoth kumarFirst Published Aug 1, 2021, 1:41 PM IST
Highlights

கேரளாவில் தொற்று அதிகமாக இருப்பதால் அங்கிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 5-ம் தேதி அதிகாலை முதல் கேரளாவில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு பிறகே தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள். 

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களுக்கு வரும் 5ம் தேதி முதல் கொரோனா பரிசோதனை கட்டாயம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் குறித்து ஆராய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கோவில்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி விமான நிலையங்களில் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உடல் வெப்பம் மட்டுமின்றி ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும் கட்டாயம்.

உடலின் வெப்பத்தை பரிசோதிக்கும் போது கருவியில் சிவப்பு நிற எச்சரிக்கை தெரிந்தால் உடலில் ஏதோ மாறுபாடு இருப்பதற்கான அறிகுறியாகும். அவர்களுக்கு ரூ.900 கட்டணத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் பரிசோதனை முடிவு தெரிய 4 மணிநேரம் ஆகும். தற்போது அதிநவீன பரிசோதனை கருவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கருவி மூலம் பரிசோதித்தால் 13 நிமிடங்களில் முடிவு தெரிந்து விடும். அந்த கருவி இன்னும் 2 நாட்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும்.

கேரளாவில் தொற்று அதிகமாக இருப்பதால் அங்கிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 5-ம் தேதி அதிகாலை முதல் கேரளாவில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு பிறகே தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள். அதாவது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு பற்றிய சான்றிதழ் அவசியம் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் ஆனதற்கான சான்றிதழ் கட்டாயம். இந்த இரண்டில் ஒரு ஆவணம் இருந்தால் மட்டுமே  தமிழகத்திற்குள் வரமுடியும். மற்றவர்கள் வர அனுமதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

click me!