ஆர்.எஸ்.எஸ். நினைப்பது ஒருபோதும் நடக்காது; கூட்டத்தில் அனல் பறக்கவிட்ட ப.சிதம்பரம்... 

Asianet News Tamil  
Published : Jun 11, 2018, 11:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
ஆர்.எஸ்.எஸ். நினைப்பது ஒருபோதும் நடக்காது; கூட்டத்தில் அனல் பறக்கவிட்ட ப.சிதம்பரம்... 

சுருக்கம்

RSS thoughts never implement p.chidambaram

சிவகங்கை
 
ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவையும், இந்தியையும் தென்மாநிலங்களில் திணிக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாண்டியன் திரையரங்கம் எதிரில் உள்ள திடலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மால்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்தக் கூட்டத்தில் ப.சிதம்பரம் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், "மத்திய, மாநில அரசுகள் பதவி ஏற்கும் நாள் அன்றே நிறைவு பெறும் நாளும் தெரிந்துவிடும். அதன்பின் மக்களின் விருப்பத்திற்கேற்ற சூழலே உருவாகும். இதனை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

மத்திய அரசு தனது 4 ஆண்டு ஆட்சி காலத்தில் என்ன செய்தது என்று கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. உண்மையை சொல்ல வேண்டிய கடமை ஆளுவோருக்கு உண்டு. 

பா.ஜ.க. ஆட்சிக்குமுன் காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் சுதந்திர இந்தியாவில் கண்டிராத பொருளாதார வளர்ச்சி இருந்தது. 

ஜனநாயகம் போற்றப்பட்டது. மக்களுக்கு அரசியல் சட்டத்தில் உள்ள அனைத்து உரிமைகளும் கொடுக்கப்பட்டன. அரசியல் சட்டத்திலேயே இல்லாத மக்களாலும் கேட்கப்படாத பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன. 

தகவல் அறியும் உரிமை சட்டம், வேலைவாய்ப்பு உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம் போன்ற பல்வேறு உரிமைகளை சட்டம் இயற்றி வழங்கி இருக்கிறோம். பேச்சில், எழுத்தில் மற்றும் மனித உரிமைகளுக்கான அனைத்து சுதந்திரங்களும் மக்களுக்கு இருந்தன. அந்த 10 ஆண்டு காலத்தில் மக்களிடையே எந்த அச்சமும் இருந்தது இல்லை.

இன்று மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இன்று நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்று கிறிஸ்துவ பி‌ஷப் தனது மக்களுக்கு கடிதம் எழுதினால் சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் ஆளுவோரின் ஆதரவுகளால் எழுப்பப்படுகின்றன. 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. காவல் விதிமுறைகளை மீறி திட்டமிட்டு இச்சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சரியான, தெளிவான பதிவைக்கூட கூற முடியாமல், முதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பயந்து செயல்படும் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். என்பது மேலாதிக்க, மேல் சாதியினருக்கான அமைப்பு. அவர்கள் இந்துத்துவாவையும், இந்தியையும் தென்மாநிலங்களிலும் திணிக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்ற உறுதி எப்போதும் நம்மோடு இருக்க வேண்டும். 

இது போன்றோரின் செயல்பாடுகள் வட நாட்டில் ஆணும், பெண்ணும் சேர்ந்து செல்லக்கூட முடியவில்லை. சமுதாயத்தினை பிளவுபடுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி மோதல்களை ஏற்படுத்தி ஆதாயம் தேடும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளை புறக்கணிக்க வேண்டும். 

சமீபத்தில் ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் பொதுமக்கள் பொருளாதார சூழல் மோசமான நிலையை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக கூறி உள்ளனர். பா.ஜ.க. அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 

மக்களை துன்பப்படுத்தி வரிச்சுமையை அதிகரித்து அவர்களின் நலன் பற்றி அக்கறை கொள்ளாது மக்களை துச்சமென நினைத்து ஆட்சி நடத்துகிறது. 

நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து நாட்டின் வளர்ச்சியை கெடுத்த மத்திய ஆட்சி குறித்து சிந்தித்து நல்ல முடிவெடுங்கள்" என்று அவர் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!