காவல் துறை RSS மயமாகிடுச்சு... கோவை போலீசை கூண்டோடு மாத்தணும்.. ஸ்டாலினை நெருக்கும் வன்னி அரசு.

By Ezhilarasan BabuFirst Published Feb 1, 2022, 11:45 AM IST
Highlights

அவர்களுக்கு மாற்றாக புதிய அதிகாரிகளை நியமித்து அங்கு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். கோவை மண்டலத்தில் ஒரு அம்பேத்கர் சிலைகூட வைக்க முடியவில்லை, இந்த நிலையில்தான் கோட்சே காந்தியை கொன்றான் என்று கூறக்கூடாது என போலீஸ் அதிகாரிகள் தடுக்கிறார்கள். அப்படி என்றால் காந்தியை கொன்றது யார். 

ஏற்கனவே நீதித்துறை, ராணுவம் ஆர்எஸ்எஸ் மயமாக்கப்பட்டு வரும் நிலையில்,  காவல்துறையும் ஆர்எஸ்எஸ் மயமாக்கப்பட்டு வருகிறது என்றும்,  தமிழக முதலமைச்சர் இந்த ஆபத்தை உணர்ந்து அதை களை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக கோவை மாவட்ட காவல் அதிகாரிகளை கூண்டோடு இடமாற்ற செய்ய வேண்டும் என்றும் அங்கு புதிய, நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்தி சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியல் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வரும் அதே நேரத்தில், சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்ந்து திமுக அரசிக்கு தலைவலியாகவே இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கூலிப்படை கொலைகள், கொலை கொள்ளை திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும்  திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளே தமிழக காவல்துறையை விமர்சிக்கும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து காவல்துறை மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு குற்றவாளிகளை கைது செய்கிறோம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களை  குறிவைத்து கைது செய்து வருவதாகவும், அவரின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சித்து வருகிறது. இதேபோல சேலம் மோரூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்ற விடாமல் சாதிய வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு சேலம் மாவட்ட போலீசார் செயல்பட்டதாகவும் காவல்துறையில் உள்ள அதிகாரிகள்  விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை வெறுப்புடன் அணுகும் போக்கு இருப்பதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியது. பின்னர் சேலம் மாவட்ட காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போராட்டம் அறிவித்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு திருமாவளவனை சமாதானப்படுத்தியன் விளைவாக போராட்டம் கைவிடப்பட்டது.

மொத்தத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை, ஆட்சி செய்வது திமுகவாக இருந்தாலும், போலீஸ் என்பது இன்னும் அதிமுக போலீஸ் ஆகவே இருக்கிறது எனவே காவல்துறையில் தமிழக முதலமைச்சர் அதிரடி மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிமுக மனநிலையில் செயல்படுகிற அதிகாரிகளை அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும்.  இல்லையென்றால் அது ஆட்சிக்கு ஆபத்தாகிவிடும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில்தான் காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி கோவை சிவானந்தா காலனி பகுதியில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர். 

அப்போது போலீசார் அந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த தட்டிகளை அகற்ற முயன்றதுடன் அதில் இடம்பெற்றுள்ள இந்து மதவெறியர்களால் காந்தி கொல்லப்பட்டார் என்கிற வாசகத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் இந்து என்ற வார்த்தை மட்டும் அதில் மறைக்கப்பட்டு நிகழ்ச்சி நடந்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உறுதிமொழியை வாசிக்கையில் கோட்சேவால் சுட்டுக்கொள்ளப்பட்ட மகாத்மா காந்தி நினைவு நாளில் என வாசித்தார்.  மீண்டும் கூட்டத்திற்குள் பாய்ந்து குறுக்கிட்ட ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா, காந்தியை கோட்சே கொன்றான் என்ற வார்த்தை பயன்படுத்தக் கூடாது என வாக்குவாதம் செய்தார்.அதேபோல் இந்து, கோட்சே போன்ற வார்த்தைகளை நீக்கவேண்டும் என உதவி ஆணையர் சுகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணா ஆகியோர் தகராறு செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு,  இராணுவம்,  நீதித்துறை காவி மயமாக்கப்பட்டுள்ளது. அதுபோல தற்போது காவல்துறையும் காவி மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. தமிழக அரசு இதில் விழித்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:-  காவல்துறை என்பது அதிகார வர்க்கமாக உள்ளது,  அது எப்போதும் எளிய மக்களை ஒடுக்கி கொண்டே இருக்கும், அப்படிப்பட்ட  இந்த அதிகார வர்க்கத்தில் முதன்மையாக இருப்பது காவல்துறைதான்.  நீண்டகாலமாக நாங்கள் சொல்லிக் கொண்டிருப்பது என்னவென்றால்,  ராணுவம் ஆர்எஸ்எஸ் மையமாகக் கொண்டிருக்கிறது.

2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு நடந்து இருக்கிறது. சம்சவுதா ரயில் எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு,  அந்த குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டனர் அதன்பிறகு மாலேகான் குண்டுவெடிப்பு,  அதன்பிறகு அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு,  இந்த குண்டுவெடிப்புகளில் எல்லாம் ஐ.பி மற்றும் ராணுவத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தது. இதே போலவே நீதி மன்றமும் ஆர்எஸ்எஸ் மயமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் காவல்துறை ஆர்எஸ்எஸ் மயமாகி கொண்டிருக்கிறது. இதை நாம் களையெடுக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம்.  தமிழக முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன், தமிழ்நாடு முதலமைச்சர் பல மாநிலங்களில் இருப்பதைப்போல இதை கண்காணித்து அதிகாரிகளை களையெடுக்க வேண்டும். குறிப்பாக கோவை மண்டலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும்.

அவர்களுக்கு மாற்றாக புதிய அதிகாரிகளை நியமித்து அங்கு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். கோவை மண்டலத்தில் ஒரு அம்பேத்கர் சிலைகூட வைக்க முடியவில்லை, இந்த நிலையில்தான் கோட்சே காந்தியை கொன்றான் என்று கூறக்கூடாது என போலீஸ் அதிகாரிகள் தடுக்கிறார்கள். அப்படி என்றால் காந்தியை கொன்றது யார். காவல்துறை ஆர்எஸ்எஸ் மையமாகிவிட்டது என்பதற்கு இதுவே உதாரணம். கொங்கு மண்டல காவல் துறையில் சாதிய, மதவாத மனநிலை கொண்ட அதிகாரிகள் உள்ளனர். உண்மையிலேயே இந்த விவகாரத்தில் முதலமைச்சர் சரியான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றால் அவர்களை கூண்டோடு மாற்றுவது தான் ஒரே வழி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

click me!