ரூ.6000 வெள்ள நிவாரணம் டாஸ்மாக் கடைக்கு சென்றுவிடக்கூடாது!குடிமகன்களுக்கு செக் வைக்க அன்புமணி கொடுக்கும் ஐடியா

By vinoth kumar  |  First Published Dec 16, 2023, 1:22 PM IST

மழை- வெள்ளப் பாதிப்புக்காக வழங்கப்படும் ரூ.6,000 நிதியும் அதேபோல் மக்களுக்கு பயன்படாமல், மதுக்கடைகளுக்கு சென்று விடக் கூடாது. 


தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.6,000 நிதியுதவி, நாளை முதல் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படவிருக்கிறது. குடும்பங்களின் துயரத்தை துடைப்பதற்காக வழங்கப்படும் நிதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் துயரத்தை ஏற்படுத்தி விடாமல் இருப்பதை அரசு தடுக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

வங்கக்கடலில் உருவாகி, ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்த மிக்ஜம் புயலால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன் முதலில் வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து ரூ.6000 நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல என்றாலும் கூட, பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை ஓரளவு குறைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கான வில்லைகள் கடந்த 14-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து நாளை தொடங்கி ஒரு வாரத்திற்கு நியாயவிலைக்கடைகள் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் ஒரே நேரத்தில் அதிக கூட்டம் சேருவதை தடுப்பதற்கான ஏற்பாடுகளும், காவல்துறை காவலும் செய்யப்பட வேண்டும்.

வழக்கமாக அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் போது, அந்தத் தொகையின் பெரும் பகுதி குடும்பத்திற்கு செல்வதில்லை என்றும், குடும்பத் தலைவர்களின் வழியாக மதுக்கடைகள் மூலம் மீண்டும் அரசுக்கே செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றனர். தீபஒளி திருநாளுக்கு சில நாட்கள் முன்பாக கடந்த நவம்பர் 10-ஆம் நாள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மக்களுக்கு ரூ.1138 கோடி வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்தநாளில் தொடங்கி 5 நாட்களில், தீப ஒளி திருநாளையொட்டி வரலாறு காணாத வகையில், ரூ.1000 கோடிக்கும் கூடுதலான மது விற்பனையானது. அதன் மூலம் மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டதில் பெரும்பகுதி அரசுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

மழை- வெள்ளப் பாதிப்புக்காக வழங்கப்படும் ரூ.6,000 நிதியும் அதேபோல் மக்களுக்கு பயன்படாமல், மதுக்கடைகளுக்கு சென்று விடக் கூடாது. மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது ரூ.25 ஆயிரத்தில் தொடங்கி சில லட்சங்கள் வரை வாழ்வாதார இழப்பும், பொருள் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசால் வழங்கப்படும் நிதியைக் கொண்டு தான் இந்த இழப்பின் ஒரு பகுதியையாவது சரி செய்ய முடியும். மாறாக, வழக்கம் போல, நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் தொகை மீண்டும் மதுக்கடைகளுக்கு சென்றால், எந்த ஒரு குடும்பத்திலும் மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய முடியாது. அது அந்த குடும்பங்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்.

தமிழக அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படுவதற்கும், மது வணிகத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூற முடியாது. கடந்த காலங்களில் பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை, வெள்ள நிவாரணம் என நிதியுதவி வழங்கப்பட்ட காலங்களில் எல்லாம் வணிகரீதியாக பயனடைந்தது மதுக்கடைகள் மட்டும் தான். தமிழ்நாட்டின் மது வணிகம் குறித்த புள்ளி விவரங்கள் இதை உறுதி செய்யும். அதனால், கடந்த காலங்களில் நடந்த அதே தவறு இப்போதும் மீண்டும் நடப்பதற்கு தமிழக அரசு வாய்ப்பளித்து விடக் கூடாது.

எனவே, மழை நிவாரண உதவி வழங்கப்படவிருக்கும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, புத்தாண்டு நாளான 01.01.2024 வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மட்டுமின்றி, அவற்றையொட்டிய பிற வட மாவட்டங்களிலும் மதுக்கடைகளை மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதன் மூலம் தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

click me!