
2000 ரூபாயை உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய அதிமுக ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் வரும் 18ம் தேதி, 39 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
அப்போது முதல் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்த பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் ரூ.85 கோடி பணம் சிக்கியுள்ளன. ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்வதில், பல்வேறு வியூகங்களை கட்சிகள் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கிராமப்புறங்களில் இருக்கும் வாக்காளர்களின் வங்கிக் கணக்குகளை சேகரிக்கும் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைக் கொண்டு, உரிய நேரத்தில் ஒவ்வொருவர் கணக்கிலும் ஒரு ஓட்டிற்கு ரூ.2,000 என்ற வகையில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கெனவே ஏழைக்குடும்பங்களை சேர்ந்த 60 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் வழங்குவதற்காக அவர்களின் விவரங்கள், வங்கிக் கணக்கு எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அந்தத் தொகையை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
ஆக, சேகரிக்கப்பட்ட அந்த விவரங்களை வைத்து வங்கிக் கணக்குகளில் 2000 பணத்தை டெபாசிட் செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் மொரதாபாத் மாவட்டத்தில் 1,700 ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் 1.7 கோடி ரூபாய் கடந்த சில நாட்களில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள இந்தப் பணவர்த்தனையை விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.