பண பட்டுவாடா புகாரில் தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது வழக்கு பதிவு!

First Published Dec 17, 2017, 3:50 PM IST
Highlights
R.K. Nagar Money Distribution - police file against 55 dinakaran supporters


ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பண விநியோகம் செய்வதாக இதுவரை, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், 19 ஆம் தேதி அன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தை வேகப்படுத்தி உள்ளனர். அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் மருதுகணேஷ், டிடிவி தினகரன் சார்பாக தீவிர பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. 

பணப்பட்டுவாடா காரணமாக கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த முறையும் தேர்தல் நிறுத்தப்படக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் கவனமாக உள்ளது. ஆனாலும், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக அரசியல் கட்சியினரும் சுயேட்சை வேட்பாளர்களும் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் பணம் வழங்கியவர்களை, காவல்துறையிடம் பிடித்தும் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளன. இந்த புகாரைத் தொடர்ந்து பண புகார் தொடர்பாக தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ராவுடன் அனைத்து கட்சியினர் இன்று காலை ஆலோசனை நடத்தினர். 

அப்போது, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஆளும் கட்சியினர் மீது பகீர் குற்றச்சாட்டுகளைக் கூறியது. நேற்று ஒரே நாள் மட்டும் ஆர்.கே.நகரில் ரூ.100 கோடி பணம் விநியோகம் செய்யப்பட்டதாக ஸ்டாலின் கூறியிருந்தார். 

இந்த நிலையில் டிடிவி தினகரன் அணியினர், வீடு வீடாக சென்று குக்கரையும், பணத்தையும் விநியோகம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தினகரன் ஆதரவாளர் என்று கூறப்படுபவர் வீட்டில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுவரை ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!