
வெள்ளைக்காரனை விரட்டியடித்தோம் என்ற உணர்வு இப்போது எங்க போச்சு என்றும் பணம் வாங்கிட்டு ஓட்டு போடுபவன்தான் தமிழன் என்ற பேச்சு வந்துவிட்டது என்றும் கார்த்தி சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டும், ஆர்.கே.நகர் மக்கள் யாரிடமும் பண வாங்க கூடாது என்பதை வலியுறுத்தி ஜி 67 என்ற அமைப்பை உருவாக்கி கார்த்தி சிதம்பரம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர் மத்தியில் ஒரு எழுச்சி இருக்கிறது என்று அனைவரும் சொல்லுகிறோம். ஆனால் இது போன்ற சூழ்நிலையில் தான் அந்த எழுச்சி வர வேண்டும் எனவும் அனைவரும் முன்வந்து பணத்திற்கு விலை போகக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பணம் வாங்கி ஓட்டுப்போட்டால் நிச்சயம் ஜனநாயக ஆட்சியாக நிலைத்து நிற்க முடியாது எனவும் பணத்திற்கு விலை போவது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் எனவும் குறிப்பிட்டார்.
வெள்ளைக்காரனை விரட்டியடித்தோம் என்ற உணர்வு இப்போது எங்க போச்சு என்றும் பணம் வாங்கிட்டு ஓட்டு போடுபவன்தான் தமிழன் என்ற பேச்சு வந்துவிட்டது என்றும் வருத்தப்பட்டார்.
வேறு மாநிலத்தவர்கள் தங்களை கொச்சைப்படுத்துவதை நிறுத்தவேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி மனசாட்சி, சுயமரியாதைதான் எனவும் இல்லையேல் வீட்டிற்கு ஒரு பாதுகாப்பு போட்டாலும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
ஆர்.கே.நகர் மக்களின் செயல்பாடுகளை பார்த்தால் எங்கள் முயற்சியில் நாங்கள் தோல்வியடைவோம் என்பதே தெரிகிறது எனவும் இளைஞர்கள் மூலம் சமுதாய புரட்சி வரவேண்டும் எனவும் இல்லையேல் இந்த ஊரும், நாடும் இப்படியேதான் இருக்கும் எனவும் தெரிவித்தார்.