
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 4 மாதங்கள் கழித்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா
செய்யப்பட்டதாக கூறி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் 44,999 போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், இந்த போலி வாக்காளர்களை நீக்கும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, ஆர்.கே.நகரில் 2,64,681 வாக்காளர்கள் உள்ளதாகவும், 45,819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
மேலும், திமுகவின் வழக்கு நிலுவையில் இருப்பதால் பணிகளைத் தொடங்க முடியவில்லை என்றும், கிருஸ்துமஸ் விடுமுறை வருவதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று அவகாசம் கேட்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிமன்றம், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தேர்தலுக்கான பணியைத் தேர்தல் ஆணையம் தொடங்கலாம் என்று உத்தரவிட்டது.
ஆர்.கே.நகர் தொகுதியில் நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் விவரம் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.