187 தொகுதிகளில் போட்டியிடும் உதயசூரியன் சின்னம்... அடிச்சு தூக்கிய திமுக..!

By Asianet TamilFirst Published Mar 9, 2021, 9:18 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 187 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது. கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளில் உதயசூரியன் சின்னதில் களம் காண்கிறது. 
 

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடன் திமுக கூட்டணியை இறுதி செய்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இ.யூ.முஸ்லிம் லீக், கொமதேகவுக்கு  தலா 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன.
இந்த வகையில் 60 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, எஞ்சிய 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. ஆனால், கூட்டணி கட்சிகளில் மதிமுக 6 தொகுதிகளிலும், கொமதேக 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சியும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

 
இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளில் 13 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எனவே, திமுக போட்டியிடும் 174 பிளஸ் 13 தொகுதிகளையும் சேர்த்தால், உதயசூரியன் சின்னம் 187 தொகுதிகளில் களம் காண்கிறது. இந்தத் தேர்தலில் தொடக்கம் முதலே 180 தொகுதிகளுக்கு மிகாமல் போட்டியிட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருந்தது. தற்போது 187  தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம் திமுகவின் அந்த எண்ணம் ஈடேறியுள்ளது.
 

click me!