இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவை மீறும் வங்கிகள்.! வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூல்.. திமுக தலைவர் ஸ்டாலின்..!

By T BalamurukanFirst Published Jul 7, 2020, 9:18 AM IST
Highlights

ரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 
 

ரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி கடன் தவணை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "கொரோனா நோய்தொற்று தமிழக மாவட்டங்களில் தீவிரமாக பரவி வருகிற காலத்தில்- குறிப்பாக, முதலமைச்சரின் மாவட்டமான சேலத்தில் மட்டும் 1247 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு- அங்கு 5 பேர் உயிரிழந்தும் உள்ளார்கள்.கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் தன் சொந்த மாவட்டத்திலேயே முனைப்புக் காட்டாமல், பாரத் பெட்ரோலியத்தின் இருகூர் - தேவனகொந்தி-  ஐ.டி.பி.எல். திட்டங்களுக்கு விளைநிலங்களை கைப்பற்ற சேலத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது, விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுந்துயரமாகும்.

ஏற்கனவே எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள பசுமை நிறைந்த பகுதிகளை வெட்டி ஒழித்து- காவல்துறையை வைத்து விவசாயிகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட முதலமைச்சர்- இப்போது இந்த எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்காக நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நிலங்களை எடுக்க கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்துவது மனித நேயமற்றது. அதிமுக அரசுக்கு மனித உயிர்களோ, விவசாயிகளின் வாழ்வாதாரமோ முக்கியமல்ல; மத்திய அரசு கைகாட்டும் இடத்தில் கைகட்டி வாய் பொத்தி நின்று- கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேளாண் நிலங்களை பறித்துக் கொடுப்பது மட்டுமே முக்கியம் என்ற நோக்கில் பழனிசாமி செயல்படுவது வேதனைக்குரியது.

விவசாயிகளுக்கு இடி மேல் பேரிடி போல் கடன் தவணையை கேட்டு மிரட்டும் செயலும் அ.தி. மு.க. ஆட்சியில் தொடருகிறது. வங்கிக் கடன் தவணையை திருப்பிச் செலுத்திட வேண்டும் என்று ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மானூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாமணி தற்கொலை செய்து கொண்டுள்ளார். “கொரோனா காலத்தில் வங்கிக் கடன் தவணைகளை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நாட்டு மக்கள் முன்பும்- உச்ச நீதிமன்றத்திலும் மாறி மாறி அறிவித்து வருகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் மீறி வங்கி தவணையை செலுத்த வேண்டும் என்று விவசாயிகளை வங்கிகள் தான்தோன்றித்தனமாக மிரட்டுகின்றன.

அறிவிப்பு ஒன்றும் அணுகுமுறை வேறுமாக அராஜகத்தை அரங்கேற்றும் வங்கிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தலையிட்டு திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
 

click me!