நெருங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தல்... இரவில் ஐவர் குழு நடத்திய அதிரடி ஆலோசனை... அதிமுகவில் திடீர் பரபரப்பு!

By Asianet TamilFirst Published Jul 7, 2020, 8:31 AM IST
Highlights

கட்சி தொடர்பாக வரும் புகார்கள், மாவட்ட செயலாளர்கள் மீதான புகார்களை விசாரிக்க அதிமுக கட்சி தலைமை சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர்  அடங்கிய ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு இரவு திடீரென வந்தனர். நீண்ட நேரம் அக்குழு ஆலோசனையிலும் ஈடுபட்டது.
 

அதிமுகவில் நிர்வாகிகள் மீது வரும் புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் குழு இரவில் நடத்திய ஆலோசனையால் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள அதிமுக தயாராகிவருகிறது. திமுகவைப் போல அதிமுகவின் தேர்தல் வியூக பணிகள், முன்பு திமுகவிடம் பணியாற்றிய சுனிலிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் பதவி ஒரே நேரத்தில் பறிக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்ப அணி பதவிகளும் மாற்றியமைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கட்சி தொடர்பாக வரும் புகார்கள், மாவட்ட செயலாளர்கள் மீதான புகார்களை விசாரிக்க அதிமுக கட்சி தலைமை சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர்  அடங்கிய ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு இரவு திடீரென வந்தனர். நீண்ட நேரம் அக்குழு ஆலோசனையிலும் ஈடுபட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள், புகாருக்கு உள்ளான நிர்வாகிகளை மாற்றுவது குறித்தும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அளித்த புகார் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்கள், எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பரிந்துரை செய்வார்கள் எனக் கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதற்கு முன்பாக, கட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஐவர் குழு திடீரென நடத்திய ஆலோசனையால், அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!