அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்.. முதியவர்களுக்கு தபால் ஓட்டு போட அனுமதி.. மம்தா கட்சி கடும் எதிர்ப்பு!

By Asianet TamilFirst Published Jul 7, 2020, 8:00 AM IST
Highlights

65 வயதை தாண்டிய ஒருவர் தேர்தலில் போட்டியிடலாம். அவர் பிரசாரமும் செய்யலாம். ஆனால், நேரில் சென்று வாக்களிக்க முடியாது என்பது கேலிக்கூத்து. எனவே, இந்த முடிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.” என்று அக்கடிதத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

முதியவர்கள் தபால் வாக்கு அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பீகாரில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பீகாரில் திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், பீகாரில் தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. பாஜக உள்ளிட்ட கட்சிகள் பீகாரில் ஆன்லைன் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் பீகார் தேர்தலை மனதில் கொண்டு 65 வயதுக்கு மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. இந்த ஆண்டு இறுதிவரை இந்த முடிவு நடைமுறையில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.


ஆனால், இந்த முடிவை திரிணாமூல் காங்கிரஸ்  கட்சி எதிர்த்துவருகிறது. அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனாவின் தாக்கம் அடுத்த ஆண்டு வரை குறையாதபட்சத்தில், இதே நடைமுறை மேற்குவங்காளம், தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரியில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பின்பற்றப்படலாம். இதைக் கருத்தில் கொண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுப்ரதா பக்‌ஷி தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், “65 வயதுக்கு மேற்பட்டோர் தபால் ஓட்டு போட அனுமதிப்பது தன்னிச்சையான முடிவு. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. கொரோனாவுக்காக தற்காலிகமாக அல்லாமல், நிரந்தரமாகவே இந்த முடிவை எடுத்துள்ளார்கள். இதைப் பற்றி அரசியல் கட்சிகளுடன் ஆணையம் ஆலோசனை நடத்தவில்லை. நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்டோர் வெறும் 6 சதவீதம் பேரே உள்ளனர். அவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்கும் உரிமையை ஆணையத்தின் முடிவு பறிக்கிறது.


மேலும் முதியவர்களுக்கு தபால் ஓட்டுகள் போட அனுமதிக்கப்பட்டால், தீய நோக்கம் உள்ளவர்களின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து அவர்கள் ஓட்டுப்போட வேண்டிய சூழல் வரும். இது தேர்தலில் முறைகேடுகளுக்கு வழிவகுத்துவிடும். நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற ஆணையத்தின் நோக்கத்துக்கு இது முரணாக அமைந்துவிடும். இந்திய ஜனநாயகத்துக்கு இது அச்சுறுத்தலாக மாறிவிடும். 65 வயதை தாண்டிய ஒருவர் தேர்தலில் போட்டியிடலாம். அவர் பிரசாரமும் செய்யலாம். ஆனால், நேரில் சென்று வாக்களிக்க முடியாது என்பது கேலிக்கூத்து. எனவே, இந்த முடிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.” என்று அக்கடிதத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

click me!